ஒருத்தரை சொல்ல முடியுமா? சீறிய உதயநிதி.. சென்னை இருங்காட்டுக்கோட்டை போங்க! கார் ரேஸை கிளப்பிய அதிமுக
சென்னை: சென்னையின் பிரதான பகுதியில் கார் பந்தயம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஃபார்முலா கார் பந்தயத்தை இருங்காட்டு கோட்டையில் நடத்த வேண்டும் என்று தலைமை செயலரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மனு அளித்திருக்கிறது.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஐ.எஸ்.இன்பதுரை மனு ஒன்றினை அளித்திருக்கிறார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"சென்னை தெருக்களை சுற்றி தமிழக அரசு மற்றும் ரேசிங் புரமோசன் நிறுவனம்ஆகியவை இணைந்து பார்முலா கார் பந்தயத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த பந்தயத்தை நடத்த தி்ட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சென்னையின் சாலைகள் நெருக்கடியான சூழலில் உள்ளன.

எதிர்ப்புகள்: சென்னையில் இந்த பந்தயத்தை நடத்தினால் தேவையற்ற பல பிரச்சினைகளும், பின்விளைவுகளும் ஏற்படும். பந்தயம் நடக்கும்போது பல பெரிய சாலைகள் மூடப்பட்டு, போக்கு வரத்து நிறுத்தப்பட வேண்டியதிருக்கும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் போன்றவை உள்ளன. பந்தய கார்கள் செல்லும்போது 120 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் உருவாகும். இது நோயாளிகளை பாதிக்கும்.
இருங்காட்டுக் கோட்டையில் பந்தயத்தை நடத்தினால் பொது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குஉச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்பதுரை: இதையடுத்து செய்தியாளர்களிடம் இன்பதுரை பேசியபோது, "சென்னையின் நெருக்கடியான சாலைகள் வழியே, கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கார் பந்தயம் நிகழ்ச்சியை நடத்த அரசு விரும்புகிறது. இது ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வுபோல் உள்ளது.
சென்னையில், பார்முலா கார் பந்தயத்தை நடத்தினால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். ஏனெனில் பந்தயம் நடக்கும்போது, பல பெரிய சாலைகள் மூடப்பட வேண்டும். போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்.
பந்தயம்: பந்தயம் நடக்க உள்ள பகுதியில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளன. இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். பந்தயத்தில் பங்கேற்கும் கார்கள் செல்லும்போது, 120 டெசிபல் அளவிற்கு மேல் சத்தம் கேட்கும். இது, அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
கார் பந்தயம் நடத்துவதற்கென்றே, சென்னையின் புறநகரான இருங்காட்டுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நிரந்தர கட்டமைப்பு உள்ளது. அங்கு கார் பந்தயம் நடத்தினால், மக்கள் மத்தியில் அதீத முக்கியத்துவமும், நிகழ்ச்சிக்கு தன்னிச்சையான பிரபலமும் கிடைக்காமல் போகும் என்பதால், சென்னையின் முக்கியமான பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து: சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்தினால் கட்டாயம் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொது மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
உயர் நீதிமன்றம் கார் பந்தயம் நடத்த பல நிபந்தனைகள் விதித்தது. ஆனால், தனியார் நிறுவனத்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வைத்தனர். வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில், கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கார் பந்தயம் நடத்தி உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டால், அது அரசு செய்த கொலையாகவே கருதப்படும்.
வீணாகும் பணம்: அமைச்சர் உதயநிதியின் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக கார் பந்தயம் நடத்தப்படுகிறது. எனவே, அரசு தரப்பில் கவுரவம் பார்க்காமல் சென்னையின் பிரதான பகுதியில் கார் பந்தயம் நடத்துவதை தவிர்ப்பதுடன், அரசு பணம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், மீண்டும் நீதிமன்ற உதவியை நாடுவோம்" என்றார்.
முன்னதாக, இந்த கார் பந்தயம் நடத்துவதற்கு அதிமுக, பாஜக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.. "பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்க்கும் பணத்தை திமுக அரசு எப்படி கொள்ளை அடிக்கிறது என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளட்டும். தன் தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க தமிழக மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்பதை உதயநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறோம்" என்று பாஜக மாநில தலைவர் காட்டமாக கூறியிருந்தார்.
உதயநிதி பதிலடி: ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு உதயநிதி பதிலடி தந்திருந்தார்.. "இந்த முறை அரசின் சார்பில், எந்த செலவும் செய்யவில்லை. இதற்கான நிதி, விளம்பரதாரர்களிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பார்முலா - 4 கார் ரேஸ் போட்டி நடத்த, விளம்பரதாரர்களை வற்புறுத்துவதாக கூறுகிறார் அப்படி, நாங்கள் யாரையாவது வற்புறுத்தினோம் என, ஒருவரின் பெயரையாவது அவரால் சொல்ல முடியுமா? விளம்பரதாரரை எப்படி வற்புறுத்த முடியும்?" என்று கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications