பெண்களே.. டவுன் பஸ்சில் தொடர்ந்து காசேயில்லாமல் போகலாம்.. மகளிர் பயணத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு
மகளிர் இலவச பஸ் பயணத்துக்காக ரூ 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நடப்பு நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மகளிர் இலவச பஸ் பயணத்துக்காக ரூ. 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்
நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த திட்டம் பெற்றுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில் இன்று பல்வேறு அறிவிப்புகள் மற்றும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அந்த வகையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

1,600 கோடி ரூபாய் முதலீட்டில்
நகரங்களில் தற்போதுள்ள பேருந்து பணிமனைகள் முக்கிய இடங்களில் அமைந்திருந்தாலும், அவற்றின் முழுப் பயன்பாடு வெளிக்கொணரப்படவில்லை. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், பேருந்து பணிமனைகளை உயர்தர போக்குவரத்து மையங்களாக தரம் உயர்த்தவும் அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்.

1,000 புதிய பேருந்துகள்
இரண்டாம் கட்டமாக, தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டையில் உள்ள 3 பணிமனைகள் 1,347 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்படும். தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

புதிய ரயில் திட்டங்கள்
இம்மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் ரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையைச் சரிசெய்ய, இந்திய இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் புதிய ரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன்(TIDCO) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும். இம்மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications