இலவச மின்சாரம்.. நிலங்களில் சோலார் பம்ப் செட் போட்டிருக்கீங்களா? தமிழக மின்வாரியம் சொல்வது உண்மையா?
சென்னை: தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது... ஆனாலும் தமிழக அரசும் நிதி நெருக்கடியில் உள்ளது.. அதனால்தான், ஒவ்வொரு வருடமும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையிலும் உள்ளன.. இப்படிப்பட்ட விவசாய நிலங்களில், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், மோட்டார் பம்ப் அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.
தமிழகத்தில் விவசாய பணிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இலவச மின்சார சேவையானது, விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்து கொண்டிருக்கிறது..

இதற்காகவே, தமிழகத்தில் 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த இலவச மின்சார திட்டத்தின் கீழ் வருடத்துக்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன.
இலவச மின்சார திட்டம்
அதுமட்டுமல்ல, நீர்நிலைகளில் வறட்சி ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத காலங்களில் பயிர்களுக்கு மின் மோட்டார்கள் மூலமே நீர் இறைத்து விவசாயிகள் பாய்ச்சுகிறார்கள். எனவே, இலவச மின்சார திட்டம் என்பது விவசாயிகளின வாழ்வாதாரத்துக்கு அவசியமானதாக அமைந்து வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு மின் இணைப்புக்கும் வருடத்துக்கு ரூ.30,000 மின்சார துறைக்கு, வேளாண்துறை வழங்கி வருகிறது.
அதேபோல, தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் (சோலார் பம்பு செட்) திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சோலாரில் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பம்ப் செட்டுகள்
இந்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2 ஆயிரம் சோலார் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நில நீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இந்த திட்டத்தின் கீழ் சோலார் பம்பு செட்டுகளை அமைத்து கொள்ளலாம்.
கான்கிரீட் காரை இடப்படாத கால்வாய்களில் இருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. இதற்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாய மின் இணைப்பு
ஒவ்வொரு வருடமும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன... ஆனால், இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.. இப்படி மின் இணைப்பு வழங்க அதிகமான காலதாமதம் ஆவதால், சில விவசாயிகள் சொந்த செலவில் தங்களின் நிலத்தில், சோலார் மோட்டார் பம்ப்களை அமைத்து கொள்கிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், விவசாயிகள் தாங்களாகவே, சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட்களை அமைத்திருந்தாலோ அல்லது ஏதேனும் அரசு நிறுவனங்களின் மானிய உதவியுடன் அமைத்திருந்தாலோ, விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டாம்' என, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த உத்தரவானது, விவசாயிகளிடம் கடுமையான அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது..
திரும்ப பெற கோரிக்கை
இது குறித்து, விவசாய கூட்டமைப்பினர் சொல்லும்போது, "விவசாய மின் இணைப்புக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படுவதால், கரண்ட் கனெக்ஷன் பெறுவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு காலதாமதமாகிறது.
விவசாய நிலத்தில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றனர். அந்த மின்சாரத்தில், பம்ப் செட்டை இயக்குகின்றனர். சோலார் மோட்டார் பம்ப் செட் அமைத்திருப்பவர்களின், விவசாய மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டாம் என்று மின் வாரியத்தின் புதிய உத்தரவால், இலவச விவசாய மின் இணைப்பு கிடைக்காது. எனவே இந்த உத்தரவை, மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications