இலவச மின்சாரம் வருமா? கோழிக்கறிக்கு சிக்கல்? இனி சிக்கன் பிரியாணி கிடைக்காதா? எலக்ஷன் வேற நெருங்குதே
சென்னை: தேர்தல் என்றாலே பிரியாணி கடைகள் பிஸியாகிவிடும்.. கூட்டங்களை நடத்துவதால், சில அரசியல் கட்சியினர் பிரியாணி கடைகளை அணுகி, பெரிய பெரிய ஆர்டர்கள் கொடுப்பார்கள்.. பிரியாணி பொட்டலங்கள், டோக்கன் மூலம், கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படும். அல்லது டோக்கனை குறிப்பிட்ட பிரியாணி கடையில் தந்தும் பெற்றுக் கொள்வார்கள். அதேபோல வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவும், '2 கிலோ பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என்றெல்லாம் சலுகைகளையும் அறிவிப்பார்கள்.. ஆனால், வரும் தேர்தலில் கோழிக்கறிக்கே சிக்கல் வந்துவிடும் போல உள்ளது.
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் கறிக் கோழிகள் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி, பல்லடம், சுல்தான்பேட்டை உள்பட பல இடங்களில் 25000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.. இங்கு தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பல்லடம் கறிக்கோழி
இந்த கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வௌிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. பண்ணை கொள் முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு மூலம் தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கூலி உயர்வின்மை, பராமரிப்பு செலவு, நோய் தாக்குதல், கடும் வெயில் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் சுல்தான்பேட்டை பகுதிகளில் கோழிப் பண்ணை அமைப்பது வெகுவாக குறைந்து விட்டதால், இந்த தொழிலில் ஈடுபட பலரும் ஈடுபட தயக்கம் காட்டுகிறார்களாம்.. ஏனவே, கோழிப்பண்ணை தொழில் வளர தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது..
கறிக்கோழி விலை நிர்ணயம்
அதேபோல ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப்பதற்கு வழங்கப்படும் கூலியை ரூ.6.50- இல் இருந்து ரூ.15- ஆக உயர்த்த வேண்டும். பண்ணை உரிமையாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், பண்ணைகளுக்கு கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும், ஆண்டுதோறும் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், கறிக்கோழி வளர்ப்பிற்கு நிறுவனம் வழங்கும் குஞ்சுகள் எடை குறையாமலும், சான்று அளிக்கப்பட்ட தரமான தீவனத்தையும் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை பண்ணை உரிமையாளர்கள் விடுத்தபடிஉள்ளனர்.
நேற்றுகூட, சென்னை எழும்பூரில், நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
கூலி உயர்த்தப்பட வேண்டும்
"கறிக்கோழி நிறுவனங்கள், கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தமிழக அரசு சார்பில், வருடந்தோறும் தோறும் முத்தரப்பு பேச்சு நடத்தி, வளர்ப்பு கூலி நிர்ணயம் செய்யப்படும் என்று கடந்த 2013ல் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை..
கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு வளர்ப்பு கூலியாக, 6.50 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை, 15 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கறிக்கோழி நிறுவனங்கள், ஆண்டுக்கு 6 முறை கோழிகள் கொடுத்து வந்த நிலையில், இப்போது சராசரியாக 3 முறை மட்டுமே வழங்குகின்றன. இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.
தேர்தலின்போது சிக்கல்
எனவே எங்களது கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் ஜனவரி முதல், தமிழகம் முழுதும் உள்ள, 40,000 கறிக்கோழி பண்ணை உரிமையாளர்களையும் ஒருங்கிணைத்து, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இதனால், தமிழகம் முழுதும் இறைச்சி கடைகளில், கோழிக்கறி கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிடும்.. இதன் எதிரொலியாக, வரும் தேர்தல் நேரத்தில் சிக்கன் பிரியாணிக்கு சிக்கல் ஏற்படும்... அதனால், எங்கள் கோரிக்கைகளை, அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications