திமுக அரசின் சானிட்டரி நாப்கின் மிஷின்.. நியூஸ்பேப்பரில் வந்த செய்தி.. ஹைகோர்ட் நீதிபதியின் அதிரடி
சென்னை: அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.. அத்துடன், அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதவிடாய் சுகாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பது போன்றவையே, இந்த மாதவிடாய் சுகாதார நாளின் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.

மாதவிடாய்: அதனால்தான், சிறுமியர், மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரம் கிடைக்கச் செய்யும் நோக்கில், தமிழக அரசு, 2011-ம் ஆண்டில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது..
இந்த திட்டத்தின்படி, தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு "புதுயுகம்' என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டும் வருகிறது. மாணவிகள் ஆசிரியையிடமும், பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியர் அல்லது அங்கன்வாடி பணியாளரிடமும் நேப்கின்களை பெற்றுக் கொள்கின்றனர்.
அரசு பள்ளிகள்: இந்நிலையில், அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்திகள் வெளியாகியிருந்தன.. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அதாவது, கடந்த 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் இலவசமாக வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படியே, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களுடன், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு எரியூட்டும் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு இல்லை: ஆனால் தற்போது, பள்ளி, கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களில் நாப்கின்கள் வைக்கப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும், பழுதாகி, காட்சி பொருளாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இதனால் மாணவிகள் சிரமத்தை சந்திப்பதாகவும், சில பள்ளி, கல்லூரிகளில் நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரங்கள் இல்லாத நிலை இருப்பதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
நாப்கின் இயந்திரங்கள்: இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், பெண் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த வல்லி தாக்கல் செய்த வழக்கில், நாப்கின் இயந்திரங்கள் வைப்பது, பராமரிப்பது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியது.
இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என்பது தினத்தந்தி செய்தி மூலம் தெரிய வருவதால், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், இந்த வழக்கை எண்ணிட்டு செப்டம்பர் 12ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
தமிழக அரசு: மேலும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications