இலவச பயணம்..அமைச்சர் சொன்ன வார்த்தை..முதல்வர் ரியாக்சன்..உடனே திருத்திய சபாநாயகர் அப்பாவு
சென்னை: சட்டசபையில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் மகளிர் இலவச பயண கட்டணம் என்று குறிப்பிட்டதை உடனே சபாநாயகர் அப்பாவு கட்டணமில்லா பயணம் என்று திருத்திக்கொள்ளுமாறு கூறினார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாள் இன்று கூடியது. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை மொத்தம் 3,337 அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என முதல்வர் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் வகுப்பறைகள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

சாலைகள் மேம்பாடு
பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு ரூ.4,067 கி.மீ சாலை மேம்படுத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55,567 கி.மீ. சாலைகளில் 6,045 கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன.

புதிய பேருந்துகள்
ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேருந்துகளில் இலவசமாக பயணித்ததன் மூலம் மகளிருக்கு சேமிப்பாக ரூ.2,000 கோடி மாறியுள்ளது எனவும், அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1.70 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார்.

அமைச்சர் சிவசங்கர்
இதற்கு நன்றி தெரிவித்து பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறையில் பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் மிக முக்கியமான சிறப்பான திட்டம் எது என்று மக்களிடத்திலே கேட்கின்ற போது, மகளிருக்கு இலவச பயணம் அளிக்கின்ற திட்டம்தான் சிறப்பானது என்று மக்களே மனமுவந்து கூறுகின்ற சிறப்பான திட்டமாக இருக்கிறது என்று கூறினார் அமைச்சர் சிவசங்கர்.

இலவச பயணம்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டதில்லை. போக்குவரத்துறை சிறப்பாக செயல்பட அதிக அளவில் முதல்வர் நிதி அளித்துள்ளார் என்றார் அமைச்சர் சிவசங்கர். ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிப்பு செய்யவும் நிதி அளித்துள்ளார். ஜெர்மன் நிதி உதவியுடன் டீசல் பேருந்துகளும் மின்சார பேருந்துகளும் வர உள்ளன. பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற முதல்வரின் கனவு நனவாகும் என்றும் சிவசங்கர் கூறினார்.

சபாநாயகர் அப்பாவு
பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார் அமைச்சர் சிவசங்கர். அமைச்சர் சிவசங்கர் பேசிக்கொண்டிருக்கும் போதே முதல்வர் ஸ்டாலின், திரும்பி பார்த்தார். இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பேசும் போது இலவச பயணம் என்பதை மாற்றி கட்டணமில்லா பயணம் என்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பொன்முடி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த மாதம் ஒரு கூட்டத்தில் பேசும் போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் ஓசியில் பயணம் செய்வதாக கூறினார். அமைச்சரின் அந்த பேச்சு சர்ச்சையானது. அமைச்சர்கள் பேசும் வார்த்தைகளிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

அமைச்சர் வருத்தம்
இதனையடுத்து அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சகஜமாக பேசியதை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்றும், தனது பேச்சால் உண்மையாகவே யாருடைய மனது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துவதாகவும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் பேசிய அமைச்சர் சிவசங்கர், மகளிர் இலவச பயணம் என்று குறிப்பிட்டதை உடனடியாக கட்டணமில்லா பயணம் என்று திருத்தினார் சபாநாயகர் அப்பாவு.












Click it and Unblock the Notifications