தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன்பிறகு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி, கல்லூரிகள் திறந்தவுடன் மாணவர்கள் அரசு பஸ்சில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இந்த பயணத்தை மேற்கொள்வது எப்படி? என்பது பற்றிய முக்கிய அறிவிப்பை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை ஜூன் 3ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் பள்ளி திறப்பதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் கல்லூரிகளில் தற்போது தேர்வுகள் முடிவடைந்து விடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் பள்ளி -கல்லூரி திறப்பையொட்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க வரும் 04.06.2026 முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்படுகிறது. . 2026-27 கல்வியாண்டில் மாணவர் /மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு. பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.
மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ /மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications