வீர வேங்கை தீரன் சின்னமலை பிறந்தநாள்! தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் நாளை நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியருக்கு 17.04.1756 அன்று மகனாகப் பிறந்தார் தீரன் சின்னமலை. இவர் இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும்

தீரன் சின்னமலை இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து இளம் வீரராக உருவெடுத்தார்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து செயல்பட்டார். கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" என்று பெயர் பெற்றார்.
மைசூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்று போர்களிலும் திப்பு சுல்தான் - தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினார்.
பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சீன்னமலையின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications