அமைச்சர் உதயநிதி டீ-சர்ட் விவகாரம்: சரமாரி கேள்வி கேட்ட நீதிமன்றம்! புதிய மனுக்களை விசாரிக்க மறுப்பு
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டீ சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளையும் விசாரிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் , துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரியும் மேலும் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இரு வழக்குகளும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரர் சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications