45 முதல் 73 வயது வரை.. ரஜினிகாந்த் அடித்த அரசியல் ‘பல்டி’கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1996இல் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் பேசியது முதல் இப்போது திமுகவில் ஓல்டு ஸ்டூடண்ட் அதிகம் உள்ளனர் என்று பேசியதுவரை ரஜினியின் ஒட்டுமொத்த பேச்சுகள் சொல்வது என்ன?

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு தவிர்க்கவே முடியாத சக்தியாக மாறியது 1996இல் தான். 1991 முதல் அவரை சுற்றிப் பல அரசியல் சர்ச்சைகள் பேசப்பட்டு வந்தன. ஆனாலும் ஒரு திருப்பு முனை என்பது 1996இல்தான். அதாவது அவர் 1993இல் வள்ளி படத்தை இயக்கும்போதே அவர் மீது அரசியல் வலை வீசப்பட்டது. அப்போது இந்தியா டுடேவுக்குப் பேட்டி அளித்த ரஜினி தான் நிரந்தரமாக இமயமலைக்குப் போய் செட்டில் ஆகவே விரும்புகிறேன் என்றார். அந்தப் பேட்டி வெளியாகி 3 ஆண்டுகளில் அவர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் திமுக, தாமாக கூட்டணியை ஆதரித்து அறிக்கை கொடுத்தார். 'இனிமேல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது' என்று சொன்ன கையோடு அவர் அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார்.

rajinikanth dmk

ஆனால், அந்தப் பேட்டி அரசியல் களத்தையே புரட்டிப் போட்டது. அதிமுக வரலாறு காணாத அளவுக்கு படுதோல்வியைத் தழுவியது. திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானார் மு.கருணாநிதி. இந்த அரசியல் பிரளயம் ஏற்படுவதற்கு முன்னால் ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 1998 தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ரஜினி தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அப்போது திருவாரூரைச் சேர்ந்த ரஜினி கார்த்திக் என்பவர், 'பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு அரசியல் தெரியாது என்று சொல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த ரஜினி, "உண்மைதான். இப்போது அரசியல்வாதிகள் செய்கின்ற அரசியல் பற்றி எனக்குத் தெரியாதுதான். அரசியல் என்பது என்னைப் பொறுத்தவரைப் பொதுநலம். சுயநலவாதிகள் அதற்குள் வரக் கூடாது. சுயநல நினைப்பு உள்ளவர்கள் பொதுநலத்தில் இருக்கக் கூடாது. ஏழையை ஏழையாக வாழ விடக் கூடாது. சிலர் வாழப் பலரைத் தாழ விடக்கூடாது" என்று பேசி இருந்தார்.

எப்படி ஜெயலலிதா தோல்விக்கு ரஜினிகாந்த்தின் வாய்ஸ் ஒரு கருவியாகப் பயன்பட்டதோ அதேபோல அவர் கோவை வெடிகுண்டு சம்பவம் பற்றி வாய் திறந்ததும் சர்ச்சையானது. 1998இல் திமுக ஆட்சியில்தான் இது நடந்தது. அப்போது கோவைக்கு அத்வானி வந்திருந்தார். அதையொட்டி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தக் கோவைக் குண்டு வெடிப்பு பற்றி ரஜினிகாந்த் தனது பிறந்தாள் பேட்டியில் பேசி இருந்தார். தமிழ்மணி என்ற கரூரைச் சேர்ந்த ஒருவர் ரஜினியிடம் 'தமிழ்நாட்டில் மட்டும்தான் வெடிகுண்டு வெடிக்கிறதா? வேறு மாநிலத்தில் வெடிக்கவில்லையா? அது உங்கள் காதில் கேட்கவில்லையா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ரஜினி, "முதலில் நம்ம வீட்டைச் சுத்தப்படுத்துவோம். பிறகு அடுத்த வீட்டைப் பார்ப்போம்" என்று கூறியிருந்தார். முதலில் ஜெயலலிதாவை எதிர்த்து 1996இல் ரஜினி வாய்ஸ் கொடுத்த போது திமுகவினர் அதை ஆதரித்துக் கொண்டாடினர். அதே கோவைக் குண்டு வெடிப்பு பற்றிப் பேசிய போது ரஜினியை விமர்சித்தனர். அப்படித்தான் பல ஆண்டுகள் முன்னதாக 1996இல் ஏன் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தேன் என்பது பற்றி சில ஆண்டுகள் முன்பு விளக்கம் அளித்த ரஜினி, 'நீங்கள் ஒரு அறிக்கையாவது தரவேண்டும். இல்லை என்றால் நீங்கள் கோழையாகிவிடுவீர்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்துச் செத்தாலும் சாவேனே தவிர கோழையாகச் சாகமாட்டேன்' என்று சொல்லவே அறிக்கை கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.

1996 தேர்தலில் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்த ரஜினி பிறகு அவருடன் ஒரு இணக்கமான நட்பைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். குறிப்பாகத் தனது மகள் திருமணத்திற்கு ஜெயலலிதாவுக்கு அழைப்பு கொடுத்தார். அதன்பின்னர் ஜெயலலிதா பற்றித் தான் தவறான புரிதலில் பேசிவிட்டதாகவும் ஆனால், அவர் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் என் மகள் திருமணத்திற்கு வந்தார் எனக் கூறி இருந்தார். அரசியல் ரீதியாக எடுத்த ஒரு நிலைப்பாட்டை அவர் சொந்த வாழ்க்கையோடு போட்டுக் குழப்புக் கொள்கிறார் எனச் சிலர் கருத்து கூறினர்.

rajinikanth dmk

முதலில் ஜெயலலிதாவைத் தைரியமாக எதிர்த்த ரஜினி பிறகு மனம் மாறினார். குறிப்பாக மு.கருணாநிதிக்கு 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' ஒன்றை 2010 திரையுலகினர் ஏற்பாடு செய்தனர். அதில் பங்கேற்ற ரஜினி, விழாவில் அஜித் தனது உரையில், 'எங்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார்கள் ஐயா' என்று ஓபனாக பேசிய போது எழுந்து நின்று கைதட்டி ரசித்தார்.

அதன்பின்னர் கடந்த 7 ஆண்டுகள் முன்னதாக தனது ரசிகர்கள் சந்திப்பு விழாவை நடத்திய ரஜினி, '1996இல் ஒரு கூட்டணிக்கு ஆதரவாகத் தான் நிலைப்பாடு எடுத்தது தன் வாழ்வில் நடந்த விபத்து' என்று மாற்றி பேசினார். கடந்த 4 ஆண்டுகள் முன்னதாக ரசிகர் மத்தியில் கட்சி தொடங்குவது உறுதி என பேசிய ரஜினி, 'தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டு விட்டது. சிஸ்டத்தை முதலில் சரி செய்ய வேண்டும்; என்றார். அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அவரை அடுத்து ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவருக்கு ஆதரவு ஒன்றும் தரவில்லை. அதைப் பற்றி அவர் வாய் திறக்கவும் இல்லை.

இந்நிலையில்தான் இப்போது திமுகவில் ஓல்டு ஸ்டூடண்ட் அதிகம் உள்ளதாகக் கவலைப்பட்டு கருத்து கூறியுள்ளார். தமிழ்நாட்டின் சிஸ்டம் கெட்டுவிட்டது என்று சொன்னவர் அதன் பிறகு தனது உடல்நிலை கெட்டுவிட்டது என்று கட்சி தொடங்கும் திட்டத்தையே கைவிட்டு விட்டுவிட்டார். ஆனால், தொடர்ந்து இப்போது துரை முருகன் சொன்னதைப் போல நடித்துக் கொண்டே இருக்கிறார். உடல்நிலை நடிக்கும் போது மட்டும் ஒத்துழைக்கிறதா? அரசியல் கட்சி தொடங்க மட்டும் ஒத்துழைக்கவில்லையா? என்று சிலர் கேள்வி கேட்கின்றனர்.

இவரை நம்பி பல வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழருவி மணியனே ரஜினியை சில ஆண்டுகளாக விமர்சித்து வருகிறார். இப்போது துரை முருகனை விமர்சித்துவிட்டு, நாங்கள் நண்பர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். ஒட்டு மொத்தமாக இவரது அரசியல் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+