வருமான வரி, தங்க விலை, ரேஷன்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10 மேஜர் விஷயங்கள் இவைதான்
சென்னை: மத்திய அரசின் 2024-25ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள 10 முக்கியமான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.
அறிவிப்பு 1: ஆண்டு வருமானம் ரூ3 லட்சம் வரை வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோர்- நிரந்தர கழிவு ரூ50,000-ல் இருந்து ரூ75,000 ஆக உயர்வு

ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ15லட்சம் பெறுவோருக்கு 20% வரி
அறிவிப்பு 2: நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி பொருட்களின் இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்து அறிவித்தார். தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதம் ஆகவும் வைரத்திற்கு 6.4 சதவிகிதமாகவும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 2 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது
அறிவிப்பு 3: 1 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் வகையில் சோலார் அமைக்க உதவி செய்யப்படும். 1.28 கோடி பதிவுகள் மற்றும் 14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இந்த திட்டம் விரிவாக்கப்படும்.
அறிவிப்பு 4: உயர் கல்வி மாணவர்களுக்கான கல்விக் கடன் ரூ10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கல்வி, திறன் மேம்பாட்டிற்காக ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அறிவிப்பு 5: பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகாருக்கு இதேபோல் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் என்று இரண்டு மாநிலங்களுக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 6: செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 7; 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும். தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ₹3000 அரசு செலுத்தும்.
அறிவிப்பு 8: நாடு முழுக்க ரேஷன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நல்ல செய்தி ஒன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ரேஷன் கார்டு திட்டமான, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார். அதன்படி 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. PMGKAY ஆனது ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்குகிறது மற்றும் பொது விநியோக முறை (PDS) மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும். அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 9: மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும், என்று பல இலவசங்கள், சமூக நீதி திட்டங்களை பாஜக வாரி வழங்கி உள்ளது.
அறிவிப்பு 10: 2024 பட்ஜெட்டில் சிறார்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம், என்பிஎஸ் வாத்சல்யா எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை வயது வந்தவுடன், அதாவது 18 வயதை எட்டியதும் இந்தத் திட்டம் சாதாரண NPS ஆக மாற்றப்படும். பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுக்கு ஓய்வூதியத்தைத் திட்டமிடலாம். என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தின் கீழ், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பங்களிக்க முடியும். என்.பி.எஸ் வாத்சல்யா என்பது சிறார்களுக்கான திட்டமாகும், இதில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் பங்களிக்க முடியும். குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இந்த திட்டம் வழக்கமான NPS ஆக மாற்றப்படும்.












Click it and Unblock the Notifications