நீதிபதி முதல் நீட் வரை.. ஐஐடி முதல் அயல்நாடு வரை.. அரசுப் பள்ளி தரத்தை உயர்த்திய ஸ்டாலின்
சென்னை: நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க இந்த ஆண்டு 225 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பது அழுத்திச் சொல்ல வேண்டிய செய்தி.
அதற்கான விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினே தன் கையால் விருதுகளை வழங்கி பெருமை சேர்த்தார். முதல்வர் கையால் முதல் தலைமுறையைச் சேர்ந்த ஏழை வீட்டுப் பிள்ளைகள் விருது பெற்றார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இதற்கு முழுக்க முழுக்க காரணம், அரசு புதியதாக உருவாக்கித் தந்துள்ள அரசு சிறப்பு மாதிரி பள்ளிகள். அந்த கான்செப்ட் இன்றைக்கு உலக அரங்கிற்கு அரசுப் பள்ளி மாணவர்களைத் தரம் உயர்த்தி இருக்கிறது.
அதற்குச் சரியான எடுத்துக்காட்டு மாணவி ஜெயதிரிஷா இந்தப் பேச்சு. பல கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்குகிறார்."நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் தான். முன்பு எல்லாம் அரசுப் பள்ளி என்றாலே எந்த வசதியும் இருக்காது. அங்கே சரியாகச் சொல்லித் தர மாட்டார்கள் என்ற ஒரு பழமையான நம்பிக்கை இருந்தது.

ஆனால், இப்போது எல்லாம் அப்படி இல்லை. அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிக்கு இணையாக மாறி இருக்கிறது. நான் கூட அரசுப் பள்ளியில் படித்துத்தான் இன்று முன்னேறி இருக்கிறேன்.
இப்போது 38 மாவட்டங்களில் சிறப்பு மாதிரி பள்ளிகளை அரசு தொடங்கி இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், ஒவ்வொரு பாடத்திற்கு தனித்தனியான ஆசிரியர்களை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

நாம் என்னென்ன உயர்கல்விக்கான தேர்வுகளை எழுத வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கான அனைத்து வசதிகளையும் அரசே ஏற்படுத்தித் தருகிறது. அதனால் அரசுப் பள்ளிகளை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இதுதான் இன்றைக்கு உள்ள ட்ரெண்டிங்கில் டாப் மோஸ்ட் ஸ்கூல்" என்கிறார். இவர் NATA தேர்வு எழுதி உயர்கல்வி நிறுவனத்தில் படிக்கச் செல்கிறார்
இவரைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி. இவர் 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படித்தவர். கல்வியில் மிகவும் பின் தங்கிய அரியலூர் மாவட்டத்தில் வென்று காட்டி உள்ள மாணவி. "என் அப்பா அம்மா இருவரும் விவசாயிகள். பெரிய வசதிகள் இல்லை.

நான் NATA தேர்வு எழுதினேன். எல்லா செலவுகளையும் அரசுதான் செய்தது. மாடல் ஸ்கூல் என்பதால் அரசுப் பல சலுகைகளை எங்களுக்குச் செய்து தந்தது. தேர்வுக்கான கட்டணம், பயிற்சி வகுப்புக்கான கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டது.
நான் உயர்கல்வி பெற்று வேலைக்குச் சேரும்வரை அரசே எல்லா செலவுகளையும் செய்யும். இவ்வளவு சலுகையும் எனக்கு அரசுப் பள்ளியில் படித்ததால்தான் கிடைத்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி"என்கிறார்

அரசுப் பள்ளி மாணவன் ஜனார்த்தனன் இந்த ஆண்டு என்ஐடி படிக்கச் செல்கிறார். "நான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நான் இந்த ஆண்டு சூரத்தில் உள்ள என்ஐடியில் படிக்கப் போகிறேன்.
எங்கள் கிராமத்திலிருந்து நான் தான் முதன்முதலில் என்ஐடியில் படிக்கப் போகிறேன். எனக்கு அப்பா இல்லை. கடந்த ஆண்டுதான் அவர் மறைந்தார். அம்மா மட்டும்தான். என் அம்மா கூலி வேலைதான் பார்க்கிறார். அவரது வருமானத்தில்தான் நான் படித்தேன். எனக்கு இங்கு உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி" என்கிறார்

இவரைப் போலவே அரசுப் பள்ளி மாணவி செளமியாவும் இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கச் செல்கிறார். அவர், "நான் கோவை மாவட்டம் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். என் பெற்றோர்கள் கூலி வேலைதான் பார்க்கிறார்கள். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான்.
முதலில் என் ஆசிரியர்தான் என்னை ஜெஇ தேர்வு எழுத முயற்சி செய் என்று சொன்னார். எனக்கு ஜெஇ என்றால் என்னவென்றே தெரியாது. அவர்தான் புத்தகங்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். நான் படித்து பரீட்சை எழுதினேன். அதில் எனக்கு நல்ல துறையில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஃபுட் டெக்லானஜி படிப்பு கிடைத்துள்ளது" என்கிறார்

மாணவி பூமிகா, "நான் கொல்லை மலையில் உள்ள அரசு மாடர்ன் ஸ்கூலில் படித்தேன். அங்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். அது உண்டு உறைவிடப் பள்ளி. அங்கே புத்தகம் மற்றும் சீருடை அனைத்தும் இலவசம்தான்.
நான் நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியை சார்ந்தவர். ஜெஇ தேர்வு எழுதியதன் மூலம் எனக்குத் திருச்சி என்ஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இந்தளவுக்கு நான் முன்னேற 'நான் முதல்வன்' திட்டம்தான் பெரிய உதவியாக இருந்தது. அதைப்போன்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் எங்களை உயர்வான இடத்தில் வைத்துப் பார்ப்பதற்காகக் கடினமாக உழைத்தார்கள்.
இப்போதுதான் எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கு ஜெஇ தேர்வு பற்றி எல்லாம் முன்பு எதுவுமே தெரியாது. 'நான் முதல்வன்' திட்டம் அறிமுகமான பிறகுதான் அதன் மூலம் கோட்சிங் கொடுத்தார்கள். தேர்வு எழுத வைத்தார்கள். இப்போது எங்கள் பள்ளியில் ஜெஇ மற்றும் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாகவே நடத்தப்படுகின்றன.

இதனால், ஒரு பெரிய விழிப்புணர்வு உண்டாகி உள்ளது. அடுத்த ஆண்டு முதல், எங்கள் பள்ளியிலிருந்து அதிகமான மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வார்கள். அதற்காக நான் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்கிறார்
இவரது தந்தை முத்துசாமி ஒரு கூலித்தொழிலாளி. அவர் என்ன சொல்கிறார்? "என் மகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவரது கையால் விருது கொடுத்தார். அதைப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருந்தது.
நமது பிள்ளைகளும் இப்படி உயர்வான படிப்புக்குப் போக முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் வழங்கி இருக்கிறார். என் மகள் திருச்சி என்ஐடியில் இடம் கிடைத்திருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்கிறார்.
இவரைப்போலவே வெற்றிப்படிக்கட்டில் தனது விடா முயற்சியால் ஏறி நிற்கிறார் மாணவி காயத்ரி. இவரும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்தவர். இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி இவர்தான்.
"என் உறவினர்கள் அனைவரின் பிள்ளைகளும் தனியார் பள்ளியில்தான் படித்தார்கள். நான் மட்டும்தான் அரசுப் பள்ளியில் படித்த பெண். அதற்காகவே எல்லோரும் என்னைத் தாழ்வாகப் பார்த்தார்கள். ஆனால், இன்றைக்கு சிபிஎஸ்சி பள்ளியில் படித்த பிள்ளைகளைவிட இன்றைக்கு இந்த அரசுப் பள்ளியில் படித்த நான் தான் நல்ல புகழோடு இருக்கிறேன்" என்கிறார்
அடுத்த மாணவன் ஹரிஹரன். 1 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் பயின்றவர். "எங்கள் ஊரிலிருந்து நான் தான் முதன்முதலில் பெரிய கல்வி நிறுவனத்திற்குப் படிக்கச் செல்கிறேன். ஐஎம்யு தேர்வு எழுதி விசாகப்பட்டினத்தில் உள்ள உயர்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்கப் போகிறேன்.
பொதுவாகத் தனியார் பள்ளியில் படிப்பவர்கள்தான் இந்த மாதிரியான இடங்களுக்குப் படிக்கப் போவார்கள். ஆனால், அரசு எங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ள திட்டங்களால் ஊக்கத்தொகையோடு உயர்படிப்புக்குப் போகிறேன். அதற்கு முதல்வர்தான் காரணம்" என்கிறார்
"என் சாதனைக்கு அரசுப்பள்ளி பெரும் உதவியாக இருந்தது" என்கிறார் மாணவர் அப்துல்லா. சாதாரண கிராமத்திலிருந்து CLAT பரீட்சை எழுதி, தந்து நீதிபதி கனவை நிறைவேற்றி இருக்கிறார். அவர் எழுதிய தேர்வில் மாநில அளவில் முதல் மானவராக வந்துள்ளார்.
இப்படி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவ சுந்தரி, வேலூரைச் சேர்ந்த ஹிர்பன்ராஜ் எனப் பலரும் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கப் போகும் அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்கள். இதில் எல்லாம் உச்சம் தருமபுரியைச் சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ தைவானுக்குப் படிக்கப் போகிறார்.
வெறும் வெற்றியாளர்கள் இல்லை இவர்கள். இந்த 2 ஆண்டுகளில் அரசுப் பள்ளியின் தரம் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்பதற்காகச் சாட்சி இவர்கள்.












Click it and Unblock the Notifications