கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, தியாக தாய்.. இனி "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அரசியல் தலைவர்களுக்கு அடைமொழிகளையும் பட்டங்களையும் வழங்குவதில் தமிழ்நாடு எப்போதும் வஞ்சகம் வைத்ததே இல்லை. இந்த வரிசையில்தான் இப்போது முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு "புரட்சித் தமிழர்" பட்டம் வழங்கி உள்ளது அக்கட்சியின் மதுரை மாநாடு.
மன்னர்கள் ஆட்சிக் காலம் தொடங்கி ஆளுமைகளுக்கு பட்டங்கள் வழங்குவது என்பது இந்திய மரபில் தொடர்ந்து வருகின்றன. நாட்டின் விடுதலைக்கு பிந்தைய அரசில் ஆளுமைகளின் செயல்பாடுகளுக்கும் வழங்கப்படும் பட்டங்களுக்கும் ஏதோ ஒருவகையில் பொருத்தமும் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல இந்த பட்டங்கள் வேடிக்கைப் பொருளாகின.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரும் முன்னரே கலை உலகில் இத்தகைய பட்டங்கள் கொடிகட்டிப் பறந்தன. "பேரறிஞர்" அண்ணா, "கலைஞர்" மு.கருணாநிதி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், புரட்சி நடிகர் எம்ஜிஆர், "சிவாஜி" கணேசன் என இப்பட்டியல் நீண்டு இன்று சூப்பர் ஸ்டார் யார் என்பதற்காக அடித்துக் கொள்கிற வரை தொடருகிறது. இந்த தலைவர்கள் அரசியலுக்கு வந்த போது அண்ணா, கருணாநிதிக்கான அடைமொழிகள் மாறவில்லை. எம்ஜிஆருக்கு வழங்கப்பட்ட புரட்சி நடிகர் பட்டம் "புரட்சித் தலைவர்" என்றானது.
1970களுக்கு பிந்தைய தமிழ்நாடு அரசியலில் "கலைஞர்" vs "புரட்சித் தலைவர்" என்ற இருதுருவ அரசியல் கோலோச்சி இருந்தது. 1980களில் தமிழ்நாடு அரசியலில் எம்ஜிஆரால் ஜெயலலிதா அம்மையார் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார். ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது அதிமுகவில் அவருக்கு என ஒரு ஆதரவு அணி உருவான கால கட்டத்தில் பல பெயர்கள் அவருக்கு சூட்டப்பட்டன. அதில் திராவிட செல்வி, புரட்சி செல்வி என்றெல்லாம் அழைத்துப் பார்த்தனர். ஆனால் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை ஜெயலலிதாவுக்கான பட்டங்கள் எடுபடவில்லை.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவினரால் ஜெயலலிதா, "புரட்சித் தலைவி" என உருமாறினார். எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என பிரகடனம் செய்து ஜெயலலிதாவுக்கு "புரட்சித் தலைவி" என பட்டம் கொடுத்தனர் அதிமுக தொண்டர்கள். இதுவும் ஒரு கட்டத்தில் அபரிதமான வளர்ச்சியைத் தொட்டது. ஆம் "புரட்சித் தலைவி" தொடங்கி "புரட்சித் தாய்" , "தெய்வத் தாய்" என்றெல்லாம் ஜெயலலிதா அழைக்கப்பட்டாலும் சரித்திரத்தின் பக்கங்களில் "புரட்சித் தலைவி" நிலைத்துவிட்டார். இதே காலகட்டத்தில் திமுகவில் "போர்வாள்" வைகோ, "தளபதி" ஸ்டாலின் என்ற பெயர்களும் நிலைத்தன.
பின்னாளில் வைகோ தனிக்கட்சி தொடங்கிய போது "புரட்சிப் புயல்" என்று மகுடம் சூட்டப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு "எழுச்சித் தமிழர்" பட்டம் பொருத்தப்பட்டது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அவருக்கு கறுப்பு எம்ஜிஆர், திரைத்துறையில் வழங்கப்பட்ட புரட்சி கலைஞர் என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. விஜயகாந்துக்கு "புரட்சிக் கலைஞர்" என்ற பெயரே நின்றுவிட்டது.

திரைப்பட இயக்குநர், நடிகர் சீமான் அரசியலுக்கு வந்த போது "செந்தமிழன்" சீமான் என அழைக்கப்பட இப்போது அவரது பெயரே செந்தமிழன் சீமான் என்றானது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் "புரட்சித் தலைவி" பட்டம் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டது. அதேநேரத்தில் ஜெயலலிதாவைப் போல உருவத்திலும் நடையிலும் பேச்சிலும் தம்மை உருமாற்றிக் கொள்ல முயற்சித்த சசிகலாவுக்கும் இதே பாணி பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் "தியாகத் தாய்" "சின்னம்மா" ஆகிய பட்டங்கள் நிலை பெற்றுவிட்டன. சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரனும் தனிக்கட்சி தொடங்க அவருக்கும் "மக்கள் செல்வர்" என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த வரிசையில் தற்போது அதிமுகவை கைப்பற்றி பொதுச்செயலாளராகிவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு "புரட்சித் தமிழர்" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் ஏற்கனவே " புரட்சித் தமிழன்" என்ற பட்டத்துடன் நடிகர் சத்யராஜ் இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மதுரை மாநாட்டில் "புரட்சித் தமிழர்" பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளனர் அதிமுக தொண்டர்கள்.
இதுவரையில் நாம் பட்டியலிட்டிருப்பது ஏதோ கொஞ்சம்தான்..ஒவ்வொரு திரை நடிகருக்கும் ஒவ்வொரு குட்டி குட்டி கட்சித் தலைவருக்கும் அல்லது இனி வரப்போகும் தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்ட/ கொடுக்கப்படுகிற பட்டங்களின் பட்டியலை வாசித்தால் "யப்பா... ஆளை விடுங்க சாமீகளா" என்றுதான் சொல்லத் தோன்றும்! அவ்வளவு குவித்து வைத்திருக்கிறது தமிழர் நிலம்!












Click it and Unblock the Notifications