சரவணன் + சூர்யா.. பஸ்ஸில் ஏறியவர்களால் வந்த "சிக்கல்".. தலைமை பதவியை கையாள திணறுகிறாரா அண்ணாமலை?
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் சமீப நாட்களாக நடந்து கொண்டு இருக்கும் உட்கட்சி மோதல்கள் கட்சி குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதோடு இளம் தலைவர் அண்ணாமலையின் தலைமைத்துவம் குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது.
பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சரான காரணத்தால் அண்ணாமலை திடீரென மாநில தலைவர் பொறுப்பிற்கு வந்தார். எச். ராஜா, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் என்று பல மூத்த தலைவர்கள் இருந்த போதிலும், கட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகாத அண்ணாமலைக்கு நேரடியாக பாஜக தமிழக தலைவர் ஆனார்.
கர்நாடக சிங்கம்.. ஸ்டிரிக்ட் ஆபிசர் என்றெல்லாம் அண்ணாமலையை புகழ இணையத்தில் ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருந்தது. இருந்தாலும் அண்ணாமலை கட்சிக்கு வந்த பின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யவே கிட்டத்தட்ட 1 வரும் ஆனது.
பாஜகவில் பிரளயத்தை உருவாக்கி வரும் கேசவ விநாயகம் மீது விரைவில் நடவடிக்கை? வெல்லப் போகிறாரா அண்ணாமலை?

நிர்வாகிகள் நியமனம்
11 மாதங்கள் கழித்துதான் கட்சிக்குள் ஒவ்வொரு பொறுப்பேற்கும் புதிய நிர்வாகிகளை அண்ணாமலை நியமனம் செய்தார். அப்போதே சீனியர்களை ஒதுக்கிவிட்டு தனக்கு தோதான ஆட்களை நியமித்தார் அண்ணாமலை. அதன்பின் தொடர்ச்சியாக திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அடுத்தடுத்து பிரஸ் மீட்டை கூட்டுவது, திமுக மீது பல்வேறு புகார்களை வைப்பது என்று அண்ணாமலை செல்லும் பாதை பாஜகவினருக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளித்தது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அதே அண்ணாமலை மீதுதான் பாஜகவின் டாப் நிர்வாகிகள் கூட அப்செட் ஆகும் அளவிற்கு பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது.

உட்கட்சி பூசல்
இந்த உட்கட்சி மோதல் வெளிப்படையாக தெரிந்தது கேடி ராகவன் விஷயத்தில்தான். கேடி ராகவன் பெண் ஒருவருடன் பேசும் ஆபாசமான வீடியோ ஒன்றை அண்ணாமலையிடம் பாஜக நிர்வாகி மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் காட்ட, அதில் அண்ணாமலை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தார். கடைசியில் கேடி ராகவன் வீடியோ, இது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ உட்பட அனைத்தும் இணையத்தில் கசிந்தது. இந்த விவகாரத்தில் கடைசியில் கேடி ராகவன் பாஜகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். அதில் இருந்து மொத்தமாக அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார்.

கேடி ராகவன் அண்ணாமலை
கேடி ராகவன் மீது அண்ணாமலைக்கு இருந்து கோபம் காரணமாக இந்த வீடியோவை அண்ணாமலை தடுக்கவில்லை என்றெல்லாம் ஆதாரமற்ற விவாதங்கள் கூட அப்போது எழுந்தன. இது தொடார்பாக அமைக்கப்பட்ட உட்கட்சி விசாரணை ஆணையமும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அப்போதுதான் அண்ணாமலை மீது சீனியர்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தியே வெளியே வர தொடங்கியது. அதன்பின் மதுரையில் அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையானது. மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்தால் ஒரு ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம் பற்றிய செய்திகள் அடங்கி போய்.. அமைச்சர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது தலைப்பு செய்தி ஆனது.

அண்ணாமலை பிடிஆர்
இந்த விவகாரம் கையை மீறி போனதால் அண்ணாமலை வேறு வழியின்றி விளக்கமும் கொடுத்தார். அதில், நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். நம்முடைய கட்சி வன்முறையை ஆதரிக்கும் கட்சி அல்ல. அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. வன்முறையை நாம் சொல்லி கொடுக்க போவதில்லை. நமக்கு ஆழமான தேசிய கலாச்சரத்தின் மீது நம்பிக்கை உள்ளது, என்று கூறினார். ஆனால் அதே சமயம் இதை எப்படி அரசியலாக்கலாம் என்று அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ ஒன்றும் பெரிய சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் பிடிஆரை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டதோடு பாஜகவில் இருந்தும் வெளியேறினார். பாஜகவின் கொள்கைகள் எனக்கு ஒத்துவராது. பாஜக பிரிவினை அரசியலை செய்கிறது. மன உளைச்சலோடுதான் நான் பாஜகவில் இருந்தேன். அமைச்சர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன உளைச்சலை ஏற்படுத்தியது. தூக்கம் வரவில்லை. இதனால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு தெரிவித்தேன். பாஜகவில் இருந்து விலகுகிறேன், என்று சரவணன் தெரிவித்தார்.

அண்ணாமலை சரவணன்
இந்த விவகாரம் அண்ணாமலைக்கு பெரிய பிரஷரை உண்டாக்கிய நிலையில், சமீபத்தில் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் மௌனம் கலைத்தார். பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எதிராக லைக் லைக் போட்டு செய்கின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி இவரை பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.

காயத்ரி ரகுராம்
இன்னொரு பக்கம் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவர்கள் இருவருக்குமான ஆடியோ உரையாடல் பாஜகவில் புயலை கிளப்பியது. இந்த ஆடியோவில் கேசவ விநாயகம் பெயர் அடிபட்டது. பாஜகவின் பெண்கள் பதவி பெற பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் புகார் வைக்கப்பட்டது. இதே புகார்தான் கேடி ராகவன் வீடியோ வந்த சமயத்திலும் வெளியானது. அதே விவகாரம் தற்போது திருச்சி சூர்யா விவகாரத்திலும் வெடித்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா தற்போது பாஜகவில் இருந்தும் வெளியேறி உள்ளார். எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் அண்ணாமலையை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்றும் திருச்சி சூர்யா புகார் வைத்து இருக்கிறார்.

கோவை சம்பவம்
சமீபத்தில் கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கூட வானதி சீனிவாசன் போராட்டம் செய்வோம் என்று சொல்ல.. அண்ணாமலை அதெல்லாம் செய்ய மாட்டோம் என்று மறுத்ததும் கூட அவருக்கும் வானதிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை வெட்டவெளிச்சம் ஆக்கியது. இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. தமிழ்நாடு பாஜக பெரிய வலிமையான கட்சியாக இல்லை என்றாலும், இதற்கு முன் இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியதே இல்லை. ஆனால் அண்ணாமலை வந்த பின் பாஜக சர்ச்சை மேல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கட்சி மீது இணையத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களே புகார் வைக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எங்கே அண்ணாமலை தலைமை பதவியை சமாளிக்க திணறுகிறாரோ என்று கேட்கும் அளவிற்கு கட்சி குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. முக்கியமாக சீனியர்கள் பலர் அண்ணாமலை மீது அப்செட் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக பஸ்
சமீபத்தில் காயத்ரி ரகுராம் சர்ச்சையின் போது.. பாஜகவில் புதியவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை மூத்தவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்று காயத்ரி கூறுகிறாரே என்ற கேள்வி அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, முதியவர்கள் இறங்கினால்தான் புதியவர்கள் பஸ்ஸில் ஏறுவார்கள். பஸ் என்றால் அப்படித்தான். ஒருவர் ஏறினால். இன்னொருவர் இறங்க வேண்டும். நாளு பேர் இறங்கினால் தான் புதியவர்கள் ஏற முடியும். அரசியல் என்றால் அப்படிதான் என்றார் அண்ணாமலை. ஆனால் பாஜக என்னும் பஸ்ஸில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால், நிறைய புதியவர்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டதால்.. பழையர்களின் சப்போர்ட் இன்றி பஸ்ஸை ஓட்ட அண்ணாமலை திணறுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.