"இது டீசர்தான்".. கிஷோர் முதல் நாகராஜன் வரை.. 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.. பரபரக்கும் பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து வருகிறது. வரிசையாக 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து உள்ள நிலையில், இன்னும் சிலர் விரைவில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 எனப்படும் குண்டாஸ் சட்டம் தமிழ்நாட்டில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போடப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் கடத்துவது தொடங்கி சமூக விரோத கருத்துக்களை தெரிவித்து வன்முறையை தூண்டும் நபர்கள் வரை பலர் மீது குண்டாஸ் சட்டம் போடப்படுவது வழக்கம்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஒரு வருடம் கண்டிப்பாக ஜெயிலில் இருக்க வேண்டும். பெயில் கிடைக்காது. அதோடு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டியது இல்லை.

தமிழ்நாடு
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்தடுத்த மூன்று பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. முதலில் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது. அதன்பின் பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, அதன்பின் தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

ஒற்றுமை
இவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் ஒரு ஒற்றுமை, மூன்று பேருமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கியவர்கள். ராஜகோபாலன், நாகராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இன்னொரு பக்கம் கிஷோர் கே சாமி மீது பெண் பத்திரிக்கையாளர்களை பாலியல் ரீதியாக விமர்சித்த புகார் உள்ளது. இவர்கள் மூன்று பேரும் அடுத்த ஒரு வருடம் வெளியே வர முடியாது.

சிக்கல்
இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது குண்டாஸும் பாயும் வாய்ப்பு உள்ளது என்பதையே இந்த கைதுகள் காட்டி இருக்கின்றன.

கைது தொடரும்?
இது போக மேலும் சிலர் மீது வரும் நாட்களில் குண்டாஸ் பாயும் என்கிறார்கள். இப்போது வரை பாய்ந்து உள்ள கைது எல்லாம் டீசர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கியவர்கள் கண்டிப்பாக குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். சாட்டை துரைமுருகன், பப்ஜி மதன், சிவசங்கர் பாபா ஆகியோர் மீதும் விரைவில் குண்டாஸ் பாயும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications