1800 ரூபாய் வாடகை வீடு டூ எம்பி பதவி..! அமைச்சர் காரில் ஏறாத மகள்.. கண் கலங்கிய தமிழச்சி
சென்னை: தனது தந்தை அமைச்சராக இருந்த போது அவரது அரசு வாகனத்தில் எங்களை ஏறவிட்டதே இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறைக்கு தமிழச்சி தங்க பாண்டியனைத் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகவே தெரியும். ஆனால், அவர் ஒரு கவிஞர். ஆங்கில பேராசிரியர். 'வனப்பேச்சி', 'எஞ்சோட்டுப் பெண்' என பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்த அவர், தமிழில் கவிதை எழுதி வருகிறார். கட்டுரை நூல்களையும் எழுதி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது கணவர் சந்திரசேகர் காவல்துறை அதிகாரி. இவரது சகோதரர்தான் தங்கம் தென்னரசு. இன்றைக்குப் பரவலாக தமிழச்சி என அறியப்படும் இவரது உண்மையான பெயர் சுமதி. திமுகவில் இவரது தந்தை தங்க பாண்டியன் அமைச்சராக இருந்துள்ளார். அப்படி இருந்தும் சென்னையில் நாங்கள் வாடகை வீட்டில்தான் வாழ்ந்து வந்தோம் என்று கடந்த கால நினைவுகள் பற்றிப் பேசி இருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "அப்பா குடும்பத்தில் உள்ள பலரது திருமணம் மு.கருணாநிதி தலைமையில்தான் நடைபெற்றது. எங்கள் திருமணமும் அவர் தலைமையில்தான் நடந்தது. தயாளு அம்மாள் கூட வந்திருந்தார். பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். வைகோ அப்போது திமுகவிலிருந்தார். அவரும் வந்திருந்தார். மதுரையில்தான் 1989இல் நடந்தது.

இன்றைக்கு இருப்பதைப் போல அன்று மணப்பெண்ணுக்கு மேக் அப் போடத் தனியாக ஆட்கள் கிடையாது. என் டான்ஸ் டீச்சர்தான் ஹீமாதான் மேக் அப் போட்டுவிட்டார். எனக்கு பிரெஞ்ச் கொண்டைகூட போட்டுவிட்டார். சுயமரியாதை திருமணமாகவே நடந்தது. ஆனால், என் மகள் திருமணம் முழுக்க முழுக்க தமிழ் முறைப்படி நடந்தது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் கணவர் கூட அடிக்கடி, 'கலைஞர் தலைமையில் கல்யாணம் நடக்கும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்' என்று சொல்வார். எம்.ஏ., முடித்த உடனேயே திருமணம் நடந்தது. எம்.பில் படிக்கும்போது எனக் கர்ப்பவதியாக இருந்தேன். என் திருமணத்தில் கலந்து கொண்ட பல திமுக தலைவர்கள் இன்று இல்லை. அவர்களை இழந்துவிட்டோம். அப்பாகூட இல்லை.
இன்றைக்கு அவர் இல்லாமல் அரசியலில் பயணிக்கும்போதுகூட தனிமையை உணர்ந்திருக்கிறேன். அப்பா எழுதிய மிசாவின் போது சிறையிலிருந்து எழுதிய கடிதத்தை அவர் படத்திற்கு முன்பாக ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறேன். அவர்தான் எனக்கு பெஸ்ட் மனிதராக இருந்தார். அவர் அமைச்சராக இருக்கும்போது அவர் நாற்காலியில் போய் நிற்கக்கூடாது. அவர் பொருளைப் பயன்படுத்துவது என எதையுமே விரும்பமாட்டார்.
அமைச்சர் என்பதால் அரசு இல்லம் கொடுத்திருந்தார்கள். வீட்டில் உள்ள திரைச்சீலைகள் பல நிறங்களிலிருந்தன. அதை மாற்றி ஒரே மாதிரி போடலாம் என்றேன். உடனே சத்தம் போட்டார். 'அரசு வீடு, நம் வீடு இல்லை' என்று கண்டித்தார். ஒருநாள் கூட அரசு அவருக்குக் கொடுத்திருந்த காரில் எங்களை ஏற விட்டதே இல்லை. இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார். அதில் சோகம் என்னவென்றால், அவர் இறந்தபோது அந்த வண்டியில் ஏறித்தான் மதுரைக்குப்போனோம். அதுதான் முதல்முறையாக நாங்கள் அவர் வண்டியில் ஏறியது.
அப்பா அமைச்சராக இருந்தாலும் சென்னையில் நாங்கள் 1988இல் இருந்தே வாடகை வீட்டில்தான் இருந்தோம். 1800 ரூபாய் வாடகை. எங்களுக்குச் சொந்த வீடு இல்லை என்பது கலைஞருக்குத் தெரியவந்தது. 4 வீட்டில் வாடகை இருந்த பிறகு 2009இல் கலைஞர் இடம் கொடுத்தார். அதன் பின் வீடு கட்டி குடியேறினோம்.
கடந்த 2007இல் திமுக முதல் இளைஞரணி மாநாட்டில் என்னை திமுக கொடியை ஏற்ற சொல்லி அழைத்தார் மு.கருணாநிதி. அப்போது நான் கட்சியில் இல்லை. குடும்பம் கட்சி ரீதியாக இணைந்திருந்தது. நேரடி அரசியலில் நான் இல்லை. கல்லூரியில் பேராசிரியராக வேலையிலிருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. கலைஞரின் பேச்சை அப்பா ஒருநாளும் தட்டமாட்டார். அதனால் நானும் ஏற்றேன். இந்த அரசியல் அடையாளம் அப்பாவினால் கிடைத்தது" என்றும் உருக்கமாகப் பேசி இருக்கிறார்.
எப்போது தன்னை இளமையாக வைத்துக் கொள்வதில் தமிழச்சிக்கு தனி ஆர்வம் உண்டு. அதைப் பற்றிப் பேசிய அவர் "எனக்குத் தேவையான புடவைகளை வாங்க முன்பு அம்மாதான் கடைக்குப் போவார். எனக்கு நேரம் இருக்காது. நான் விரும்புகின்ற கலரில் சரியாகப் பார்த்து எடுத்து வருவார். இப்போது அந்த வேலையை என் மகள்கள் செய்கிறார்கள். எனக்கு என்ன பிடிக்கும் என அவர்களுக்கும் தெரியும். எப்போதும் என்னை நான் இளமையாகவே உணர்வேன். என் மகள்களுடன் வெளியே போகும் போது 'யாரு உங்கள் அக்காவா?' என முன்பின் தெரியாதவர்கள் கேட்கும்போது மனதிற்குள் மகிழ்ச்சியாக இருக்கும். என்ன? என் மகள்களுக்குத்தான் அதைக் கேட்கும்போது காதில் லைட்டா புகை வரும்?" என்று கலகலப்பாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications