அடிக்குது குளிரு..நீலகிரி கோவையில் உறைபனி..அதிகாலை பனி மூட்டம்..பகலில் சுள் வெயில்
சென்னை: மழை காலம் முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மார்கழி மாத பனி தமிழ்நாடு முழுவதும் வாட்டி வதைக்கிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் தொடரும் கடும் உறைபனி பொழிவு மற்றும் கடுங்குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும். டிசம்பர் மாதத்தின் இறுதி நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலையின் அளவு பூஜ்யம் டிகிரிக்கு செல்லக்கூடும்.
சில நாட்களில் பூஜ்ஜியத்துக்கும் கீழ் பெப்பநிலை இறங்கும்.
உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் ஆகியவை கருகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து, படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணத்தால் பனிபொழிவு தாமதமாக தற்போது துவங்கியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவியது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்படுகிறது. உறைபனி பொழிவு காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு காணப்பட்டது.
குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா, காந்தள், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது பனி படிந்திருந்தது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் உறைபனியால் புல்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போல ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதனால் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications