ஜஸ்ட் ஒருநாள்.. பெட்ரோல் பங்க் ஓனர்கள் ஸ்டிரைக்.. ரூ.450 கோடி பாதிப்பு.. இன்றும் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல் டீசல் இன்றும் 11வது நாளாக அதே விலையில் விற்பனையாகிறது
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தி பங்க் உரிமையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 450 கோடி ரூபாய்க்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது... இதனிடையே, 11வது நாளாக இன்றும், பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
அதனை தொடர்ந்து சென்னையில் மறுநாளே அதாவது 22-ம் தேதியே, பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சென்னையில் 45 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடித்து வந்தது. குறிப்பாக, சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வந்தது.

இன்றும் அதே விலை
இந்த விலை கடந்த 22-ந் தேதிதான் குறைந்தது... அதுவரை விலையில் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்த நிலையில், இந்த திடீர் விலை குறைப்பால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்தனர்.... அப்போதிருந்து இன்றுவரை அதே விலையில் பெட்ரோல் விற்பனையாகிறது.. 11வது நாளாக இன்றும் அதாவது 1-ம் தேதி, பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.

கள்ளக்குறிச்சி
இருந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டுதான் இருக்கிறது.. இதனிடையே, நேற்றைய தினம், பெட்ரோல்-டீசல் கொள்முதல் நிறுத்தும் போராட்டத்தை விற்பனையாளர்கள் சங்கம் நடத்தினர்..

எண்ணெய் நிறுவனங்கள்
கடந்த நவம்பர் 4 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் சில்லறை விலை குறைப்பினால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடு செய்திட வேண்டும். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த ஒரு நாள் மட்டும் பெட்ரோல்-டீசல் கொள்முதல் செய்வதை அகில இந்திய அளவில் நிறுத்தம் செய்தது.. அந்த வகையில் தமிழகத்திலும் வேலைநிறுத்தம் நடந்தது.

வேலைநிறுத்தம்
குறிப்பாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, திருவள்ளூர் - அத்திப்பட்டு, சென்னை - கொருக்குப்பேட்டை, மதுரை - சிட்கோ எஸ்டேட், கோவை - இருகூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பெட்ரோல், டீசல் கிடங்குகள் உள்ளன... பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று, பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தி, மேற்கண்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்படாததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 450 கோடி ரூபாய்க்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications