சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி நியமனம்.. எந்த துறைக்கு போனாலும் அசத்துபவர்
சென்னை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், எந்த துறையை கொடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்படகூடியவர் என்ற பெயர் பெற்ற ககன் தீப் சிங் பேடி தற்போது சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கட்டு இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள் நடந்து இரண்டே நாட்களில் தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை மாநகாரட்சி ஆணையராக ராதாகிருஷ்னன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மாநகராட்சி ஆணையரக இருந்த சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
யார் இவர்?: முதல்வர் ஸ்டாலினின் விருப்பத்திற்குரிய அதிகாரிகள் பட்டியலில் இருக்கும் ககன் தீப் சிங், பல்வேறு துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். 1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய ககன் தீப் சிங் பேடி, குமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றினார்.
2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப்பணிகள் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. சுனாமியால் வீடுகளை இழந்தவர்களை தங்க வைக்க சிறப்பு ஏற்பாடு, அவர்களின் மறுவாழ்விற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணப் பணிகளை அவர் செயல்படுத்திய விதம் குட்புக்கில் இடம் பெற வைத்தது. கடலூர் மக்களே அவரை பாராட்டி பேனர் வைத்தனர்.

2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, விரைவில் நிலைமை சீரடைய உதவினார். இதனைத் தொடர்ந்து வர்தா, ஒக்கி புயல் பாதிப்பின் போதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இவரே நியமிக்கப்பட்டார். கஜா புயலின் போதும் சிறப்பாகப் பணியாற்றினார்.
பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றுபவர் எனும் பெயர் இவருக்கு எப்போதும் உண்டு. கொரோனா தொற்று, சென்னை பெருமழை வெள்ளம் என தலைநகரில் துயரங்கள் தொடர்ந்த நேரத்தில், அவற்றிலிருந்து மக்களைக் காப்பதில் ககன் தீப் சிங் மிகச்சிறப்பாகப் பணியாற்றினார். எந்த துறையை கொடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்படகூடியவர் என்ற பெயர் பெற்ற ககன் தீப் சிங் பேடி தற்போது சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கட்டு இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications