தமிழ்நாடு முழுக்க வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. போலீசார் குவிப்பு.. தீவிர ரோந்து!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
Recommended Video
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் பொது இடங்களில் சிலை வைக்கவும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு உள்ளேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மக்கள் வெளியே வர கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.

அறிவுறுத்தல்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்கள் வீட்டிற்கு உள்ளேயே விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். வெளியே சிலைகளை வைத்து வழிபடாமல் வீட்டிற்கு உள்ளேயே சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினார்கள். இன்று காலை தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பாதுகாப்பு
பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலை வைக்க தடை உள்ளதால் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை முழுக்க போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிநபர்கள் தங்கள் வீட்டிற்கு உள்ளே சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் வழிபாடு
அதேபோல் தனி நபர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் சென்று தனியாக சிலைகளை கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்கவே நீர் நிலைகள், ஆறுகள், ஏரிகள் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக சென்னையில் மெரினா அருகே போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகர காவல் ஆணையர் தலைமையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. புளியந்தோப்பு மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்கள் பதட்டமான பகுதிகள் என அறியப்பட்ட காரணத்தால் அங்கு அதிக அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அகற்றம்
தடையை மீறி பொது இடங்களில் சிலை வைக்கும் இடங்களில் சிலைகள் அகற்றப்பட்டு வருகிறது. போலீசார் இவர்களை கண்டித்து சிலைகளை சில இடங்களில் அகற்றி வருகிறார்கள். தேனி பெரியகுளம் அருகே இதேபோல் பொது இடத்தில் 5 பேர் சேர்ந்து சிலை வைத்து இருந்தனர். அதை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். சிலைக்கு சேதம் ஏற்படாமல் அருகில் இருந்த கோவில் ஒன்றில் இந்த சிலையை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி விழா கொரோனா ஊரடங்கு வழிமுறைகளை கடைபிடித்து வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications