காயத்ரி ரகுராம் இணைய தயாராக இருக்கும் கட்சிகள் எவை? பேட்டியில் அவரே போட்ட லிஸ்ட்
சென்னை: அதிமுக, திமுக, விசிக, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சியில் இணைய கூப்பிட்டாலும் செல்வேன். ஆனால் எனக்கு பாதுகாப்பு தருவதாகவும் சுதந்திரமாக பணியாற்ற விடுவதாகவும் உறுதி அளிக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக காயத்ரி ரகுராம் நடந்து கொண்டதால் அவரை கட்சி பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த 6 மாத கால கட்டத்தில் காயத்ரி அவர் மீது குற்றச்சாட்டுக்கு சரியான விளக்கம் அளித்துவிட்டு மீண்டும் கட்சியில் தொடருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக அவருடைய பதவிக்கு இசையமைப்பாளர் தீனாவை நியமித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

பரபரப்பு
இந்த நியமனம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பேசி வந்தார். அவர் ஹனிடிராப் செய்ததால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அலிஷா அப்துல்லாவுக்கு பிரஸ் மீட் கொடுக்க அனுமதி கொடுத்துகட்சி அலுவலகத்திலேயே கொடுத்தநிலையில் எனக்கு மட்டும் ஏன் நீதி மறுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியிருந்தார்.

பாஜகவிலிருந்து விலகல்
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக ட்வீட் போட்டிருந்தார். அதில் சமஉரிமை கிடைக்கவில்லை, பெண்களுக்கு மதிப்பு தரவில்லை என அடுக்கடுக்கான காரணங்களை கூறியிருந்தார். மேலும் அண்ணாமலை என் மீது அவதூறு பரப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அடுத்த கட்ட நகர்வு என்ன
அப்போது அவரிடம் உங்களுடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காயத்ரி கூறுகையில் எனது இந்த நிலைக்கு முக்கிய காரணமே அண்ணாமலைதான். நான் சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தேன். எனக்கு பதவி மீதெல்லாம் ஆசையில்லை. அண்ணாமலை மாநில தலைவராக வந்தவுடன் எனக்கு கலாச்சார பிரிவின் தலைவர் பதவியை கொடுத்தார். அதில் சிறப்பாக பணியாற்றினேன்.

பதவி பறிப்பு
பின்னர் அந்த பதவியை பறித்தனர். அதை பற்றி கவலைப்படாமல் நான் கட்சி பணிகளை ஆற்றினேன். மீண்டும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழ் வளர்ச்சித் துறை பிரிவுத் தலைவராக நியமித்தார்கள். அதிலும் சிறப்பாக செயல்பட்டு மியான்மரில் இருந்து தமிழர்களை மீட்டு கொண்டு வந்தேன். ஆனால் அந்த பதவியையும் பறித்தார்கள். அதன் பிறகு என்னால் மன உளைச்சலை அனுபவிக்க முடியாமல் நான் கட்சியிலிருந்தே விலகிவிட்டேன்.

திமுகவிலும் விசிகவிலும் இணைய ரெடி
எந்த கட்சியில் எனக்கு பாதுகாப்பு இருக்கிறதோ என்னை சுதந்திரமாக செயல்பட விடுகிறார்களோ அந்த கட்சியில் நான் இணைந்து பணியாற்றுவேன். அது திமுகவாக இருந்தாலும் சரி என்னை அழைத்தால் இணைந்து கொள்வேன். எனது கொள்கையுடன் ஒத்து போகும் எந்த கட்சியில் கூப்பிட்டாலும் செல்வேன். அதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூப்பிட்டாலும் நான் இணைந்து கொள்வேன் எந காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திருமாவை கடுமையாக சாடிய காயத்ரி
திமுக குறித்து காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் காயத்ரி ரகுராமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கடுமையாக சாடியுள்ளார். மேலும் திருமாவளவனை ஜோக்கர் என்றும் கறுப்பர் கூட்டம் குறித்த விவகாரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வந்து திருமாவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டார். அதில் மிஸ்டர் திருமாவளவன் நீங்க வேல் குத்திருக்கீங்களா, இல்ல பால் காவடி எடுத்து இருக்கீங்களா நீங்கள் திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க, என சரமாரி கேள்விகளை எழுப்பியிருந்தார். அது போல் மனுதர்மம் குறித்து திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது என்ன மிஸ்டர் திருமாவளவன், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நடிகைகள் டிரஸ்ஸை கழற்றி ஆடுவார்கள் என்று சொல்கிறீர்களே.. நாங்கள் டிரஸ்களை அவிழ்த்து போட்டு ஆடுபவர்கள் இல்லை. டிரஸ்களை கழற்றுபவர்கள் இல்லை, காலில் ஒன்னு இருக்கு, ஞாபகம் வச்சிக்கோங்க என கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொந்தளித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications