திராவிடத்தை கிறிஸ்துவமயமாக்கிவிட்டனர்.. ராகுல் காந்தி ஒரு "க்ரிப்டோ".. காயத்ரி ரகுராம் அட்டாக்!
சென்னை: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கிலிருந்து வெளிவந்த பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை கொண்டாடி விட்டு 'நேரு' பிறந்த தினத்திற்கு வாழ்த்துக்களையும் சொல்கிறீர்களே! என திராவிட கட்சிகளுக்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்துடன் கூட்டணி வைத்துவிட்டு ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கொண்டாடுவதுதான் திராவிடமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திராவிட கட்சிகள் குறித்து விமர்சித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம்
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் இதில் எவ்வித முடிவையும் எடுக்காமல் அதனை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார்.

விடுதலை
இதனையடுத்து, பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதே காரணத்தை காட்டி மற்ற 6 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இவ்வாறு இருக்கையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில், விடுதலையானவர்களை திராவிட கட்சியினர் கொண்டாடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அதாவது, நேரு குடும்பத்தின் உறுப்பினரை கொலை செய்தவர்களை கொண்டாடிவிட்டு, நேருவின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்களை கூறுகிறார்கள் என்று பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

கைபர் போலன்
இதுகுறித்து பாஜக தலைவர்களுள் ஒருவரான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், "62 ஆண்டுகளாக இந்தியா பிராமண ஜவஹர்லால் நேரு குடும்ப ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் கடந்த 50 ஆண்டுக்கால குடும்பம் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது. கைபர் போலன் வழியாக இடம்பெயர்ந்த ஆரியர் நேரு குடும்பத்துடன் 62 ஆண்டுகளாக திராவிடக் கட்சி கூட்டணியில் இருந்தது. அப்போது திராவிடக் கட்சி பிராமணியத்தை கேள்வி கேட்கவில்லை, பிராமணியத்தை கேலி செய்யவில்லை. இப்போது நேரு பேரனை கொன்றவர்களை கொண்டாடுகிறார்கள் இதுதான் திராவிடமா? அதேபோல நேரு பிறந்த தினத்துக்கும் வாழ்த்துக்களை கூறுகிறார்கள்" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜக நிலைப்பாடு
மேலும், "நேருவின் கொள்ளு பேரன் ஒரு கிரிப்டோ பிராமணர். கிறிஸ்தவமயமாக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்திற்காக இந்து மதத்தின் மீது வெறுப்பை பரப்பினார்" என்றும் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே திராவிட கட்சிகள் இரண்டு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக பாஜகவின் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது காயத்ரி ரகுராமும் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தற்போது இவர்கள் ஏழு பேரயும் விடுதலை செய்யக்கூடாது என்றும், அவர்கள் முழு தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications