ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு.. கொடூர குற்றங்கள் நடைபெற்ற வீட்டில் சோதனை நடத்திய போலீசார்!
சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் ஜெம் வீரமணியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், வீரமணியின் உதவியாளா் கணேசனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஜாமீன் கோரி சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சின்ஹன் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜெம் வீரமணிக்கு நீதிமன்றக் காவல் அக்டோபர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெம் விரமணி மீதான பாலியல் வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி, குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் பொதுமக்களிடமிருந்து வீரமணி தொடா்பான புகாா்களைப் பெற்று, விசாரணை செய்து வருகின்றனா். புகாா்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து வீரமணி மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சிறுமிகளை அழைத்து வந்து வீரமணியின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகியோா் அக். 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, வீரமணி மற்றும் சாந்தி ஆகியோா் அக். 8 ஆம் தேதி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை (அக்.10) ஜெம் வீரமணி மீது 6-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 10 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் வீரமணியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். இந்தச் சோதனையின் மூலம் வழக்குத் தொடர்பான கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
