"விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாக கேட்டேன்.. சரளமாக பேசுகிறார்” - பாராட்டிய ப.சிதம்பரம்!
சென்னை: "இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன். சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி" என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மைதானத்தில் இன்று (அக். 11) நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் 13,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார். இந்த விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்ற அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் பேசியிருந்தார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் என்றைக்கும் துணைணயாக நிற்கும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கும் எனப் பேசியிருந்தார் முதல்வர் விஜய். மேலும், பிரதமர் மோடிக்கு பல்வேறு கோரிக்கைகளையும் வைத்திருந்தார் முதல்வர் விஜய்.
முதல்வர் ஜோசப் விஜய் இன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசியதை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன். சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் எல்லோரும் - குறிப்பாக இளம் மாணவர்கள் -- தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளையும் சரளமாகப் பேசவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
எல்லாப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை மற்றும் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இரு மொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும்" என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
