விஜய் மீது கடும் அப்செட்டில் விஎஸ் பாபு.. சென்னையில் கதவு க்ளோஸ்.. ஜெயன்ட் கில்லருக்கு நோ சான்ஸ்!?
சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து ஜோசப் விஜய் கேபினட்டில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றுளனர். எனினும், கொளத்தூரில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்த 'ஜெயண்ட் கில்லர்' விஎஸ் பாபு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் சென்னை மாவட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினையே வீழ்த்திய வி.எஸ். பாபுவுக்கு இடமளிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகருக்குக் கிடைத்த மகுடம்
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய முகங்கள் மற்றும் தேர்தல் களத்தில் வலுவான வெற்றியைப் பதிவு செய்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது:
என். ஆனந்த் (தி. நகர்): விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதியான புஸ்ஸி ஆனந்த், அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே அமைச்சராகியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்): தேர்தல் வியூக வகுப்பாளர் மற்றும் கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர். விஜய்க்கு மிகவும் நெருக்கமாக உள்ள ஆதவ் அர்ஜுனாவும் அமைச்சராகியுள்ளார்.
பி. வெங்கடரமணன் (மயிலாப்பூர்): மயிலாப்பூரில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற, தவெக பொருளாளரான ஆடிட்டர் வெங்கடரமணன் அமைச்சராகியுள்ளார்.
ஏ. ராஜ்மோகன் (எழும்பூர்): இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியின் முக்கியப் பேச்சாளரான் ராஜ்மோகன் அமைச்சராகியுள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
முதலமைச்சர் விஜய் (பெரம்பூர்): சென்னையின் ஒரு தொகுதியில் (பெரம்பூர்) போட்டியிட்டு வென்றவர் என்ற அடிப்படையில் சென்னையின் பிரதிநிதித்துவமாகப் பார்க்கப்படுகிறார் முதலமைச்சர் விஜய்.
சென்னை, திராவிடக் கட்சிகளின் கோட்டை, குறிப்பாக திமுகவின் கோட்டை எனச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 14-ஐ கைப்பற்றியது தவெக. இந்நிலையில் தான் சென்னையின் 5 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.
தவெகவின் முக்கிய புள்ளிகள் பலரும் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் சென்னைக்கு கேபினட்டில் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒரு கட்சிக்கு, நிர்வாகத்தின் மையப்புள்ளியான சென்னையில் வலுவான பிடி இருப்பது அவசியம் என்ற அடிப்படையிலும் சென்னைக்க் கேபினட்டில் அதிக முக்கியத்துவம் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜெயண்ட் கில்லர்' வி.எஸ்.பாபுவின் அதிருப்தி?
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய சாதனையாளர் என்று பார்க்கப்பட்டவர் வி.எஸ். பாபு. கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு கண்டிப்பான முறையில் அமைச்சரவையில் ஒரு முக்கியமான துறை ஒதுக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று வெளியாகியுள்ள 9 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
பாபு அப்செட்?
ஸ்டாலினையே வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா? என்ற கேள்வியோடு வி.எஸ். பாபு அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. கட்சி மேலிடம் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்பு ஏதேனும் வழங்கப்படலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், கட்சியின் சமூக மற்றும் மண்டல சமநிலையை கருத்தில் கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால் விஎஸ் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சரவை நிலவரம் - ஒரு பார்வை
விஜய் அமைச்சரவையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவை காணப்படுகிறது. கே.ஏ. செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களான நிர்மல் குமார், டிகே பிரபு, கீர்த்தனா (ஒரே பெண் அமைச்சர்) போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தாலும், கொளத்தூரில் சரித்திரம் படைத்த வி.எஸ். பாபுவின் புறக்கணிப்பு, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு இடையே ஒரு விவாதப் பொருளாகவே மாறியுள்ளது. அடுத்தகட்டமாக வி.எஸ். பாபுவின் அதிருப்தியைப் போக்க விஜய் என்ன அதிரடி எடுக்கப் போகிறார் என்பதே இப்போதைய அரசியல் மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications