தான பத்திரம் + கிராம நத்தம் பத்திரம்.. அதென்ன விஸ்தீரணம், வில்லங்கம்?.. பத்திரப்பதிவில் இதை பாருங்க
சென்னை: பொதுவாக வீடுகள், மனைகள், நிலங்கள் வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை தந்துதான் அவைகளை பெற வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்களில் சில சொற்கள் அல்லது வாசகங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இதன் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லை. அப்படி ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கு அர்த்தங்களை சுருக்கமாக பார்ப்போம்.
கிராம தானம்: கிராமத்தின் பொதுப் பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது, "தேவதானம்" என்பது கோவில் பயன்பாட்டுக்காகக் குறிப்பிட்ட நிலத்தைத் தானமாக அளிப்பது. "நில அளவை எண்" என்றால், ஒரு நிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட எண் அல்லது அடையாள அட்டை ஆகும். "இனாம்தார்" என்பவர்கள், பொது நோக்கத்துக்காக தன்னுடைய நிலத்தை இலவசமாக அளித்தவர் ஆவார்.

கிராம நத்தம் : ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம். நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப்பொருள். கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும். நத்தம் புறம்போக்கு நிலம் எனில், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் ஆகும்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளைக் குறிப்பது. பழைய ஆவணங்களில் இந்த வார்த்தை காணப்படும்.. அதாவது பழைய செட்டில்மென்ட் ஆவணங்களை வாங்க நேர்ந்தால், இந்த வார்த்தை அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. "குத்தகை" என்றால், ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையைக் குறிப்பிட்ட காலத்துக்குச் சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல். அதாவது, ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரைய பத்திரம் ஆகும். மேற்படி கிரையப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவதுதான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
வில்லங்கச் சான்று: ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
பட்டா: ஒருவரது தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணம் பெயர்தான் பட்டா.. அரசு இந்த ஆவணத்தை வழங்கும்.. இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே நம்பர், உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களையும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிட்டா: ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவுகள் என்னென்ன? அந்த நிலத்துக்கு யார் ஓனர்? அந்த நிலம் நஞ்சையா? புஞ்சையா? வறண்ட நிலமா? ஈர நிலமா? போன்ற விவரங்களை அடங்கிய ஆவணமாகும்.. வருவாய்த்துறை மூலம் தரப்படும் பதிவு ஆவணத்தின் பெயர்தான் சிட்டா. கிராம நிர்வாக அலுவலர் இதை நிர்வகிப்பார்.. சுருக்கமாக சொல்லப்போனால், பட்டாவின் ஒரு பகுதிதான் சிட்டா.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்தப் பகுதியில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
வில்லங்கம்: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
தாய்ப் பத்திரம்: தாய் பத்திரம் அதாவது மூலப்பத்திரம் என்பது மிகவும் முக்கியமான ஆவணம்.. முதல் முதலாக குறிப்பிட்ட சொத்தை வாங்கியவர், அதை யாரிடமிருந்து வாங்கினார், என்பதே தாய்ப்பத்திரம்.. சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கியது.
தான பத்திரம்: ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை பிறருக்கு தானமாக தருவது.. இதற்காக பணம் அல்லது வேறு பிரதி பலன் போன்ற எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காமல் தானமாகவே எழுதி கொடுக்கும் ஆவணம் பெயர்தான், தானப்பத்திரம் எனப்படும்.
தனக்கு சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ ரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல், முழுக்க முழுக்க இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படுவதுதான், இந்த தான பத்திரம்.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல். அது நிலமாகவோ, வாடகை வீடாகவோ அல்லது வேறு எந்தவகையிலான சொத்தாக இருந்தாலும், அதற்கான உரிமையை தருவதாகும். சுவாதீனம் பெற்ற நபர், அந்த சொதில் கிடைக்கின்ற த்த வருவாயையும் எடத்து கொள்ளலாம்
ஜமாபந்தி: வருவாய்த் தீர்வாயம் என்பார்கள்.. அதாவது, பசலி ஆண்டு எனப்படும், விளைச்சலை கணக்கிடும், ஜூலை - ஜூன் வரையிலான விளைச்சல் கணக்கிடப்படுகிறது. இவைகளை சரிபார்த்து தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்க, ஜமாபந்தி நடத்தப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலரின் அனைத்து பதிவேடுகளை சரிபார்த்து, ஜமாபந்தி அலுவலர் ஒப்புதல் தருவார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் ஜமாபந்தியின் மற்றொரு சிறப்பு...












Click it and Unblock the Notifications