அரசு மருத்துவமனைக்கு செல்ல மக்களுக்கு அச்சம்! நம்பிக்கையும் -உத்திரவாதமும் தர வேண்டும்! -ஜிகே வாசன்!
சென்னை: அரசு மருத்துவமனைகளை மக்கள் அச்சமின்றி அணுக சுகாதாரத்துறை தரப்பில் உரிய நம்பிக்கையும், உத்திரவாதமும் தர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆக்சிஜன் மாஸ்கிற்கு பதில் டீ கப் பொருத்தப்பட்டது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் உரிய விளக்கம் கொடுத்த நிலையிலும் ஜிகே வாசன் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

''காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் முகக்கவசத்திற்கு பதிலாக டீ கப் பயன்படுத்தியது அறிந்து அதிர்ச்சியுற்றேன். தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவனையை நாடும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரும் உத்தரவாதம் இதுதானா?.
தமிழக அரசும், சுகாதாரத்துறையும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் தங்குதடையின்றி வழங்கி முன்னரே இருப்பு வைக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும்.''












Click it and Unblock the Notifications