அதிமுகவை அதிரவைக்கும் த.மா.கா... 25 தொகுதிகளாம்.. கிள்ளியூருக்காக பாஜகவுடன் மல்லுகட்டு
சென்னை: ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 25 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது அதிமுக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா இடம்பெற்றிருப்பது உறுதியானது. சென்னையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக அணியில் தேமுதிகவும் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது.

பாஜக டிமாண்ட்
அதிமுக அணியில் தொடக்கத்தில் பாஜக 60 தொகுதிகளை கேட்டு தெறிக்கவிட்டது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்கிற தைரியத்தில் இந்த பேரத்தை வைத்தது பாஜக. ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத நிலையில் தொகுதிகளுக்கான பேரத்தை குறைத்து கொண்டிருக்கிறது பாஜக.

பாமகவுக்கு சமமாக தேமுதிக
பாமகவைப் பொறுத்தவரையில் 40-ல் தொடங்கி 30 இடங்கள் வேண்டும் என்கிறது. அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிக ஏற்கனவே 41 தொகுதிகள் வேண்டும் என கேட்டு நிபந்தனை விதித்தது. இப்போது பாமகவுக்கு இணையான தொகுதிகளை கேட்கும் நிலையில் இருக்கிறது தேமுதிக.

25 தொகுதிகள் கேட்கும் தமாகா
இந்த கோதாவில்தான் அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்டிருக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் விடியல் சேகர். திமுக அணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்பதால் அதே போல தங்களுக்கும் வேண்டும் என எதிர்பார்க்கிறதாம் தமாகா. ஆனால் ஏற்கனவே வாசனை ராஜ்யசபா எம்.பி.யாக்க்கி இருக்கிறோம். இத்தனை தொகுதிகள் எல்லாம் தர முடியாது என்பது அதிமுக நிலைப்பாடு. ஆனாலும் 25 தொகுதிகள் கேட்கிறோம் என வெளிப்படையாகவே தமாகாவினர் பேசுவது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

கிள்ளியூர் தொகுதிக்கு மல்லுகட்டு
இதேபோல் கிள்ளியூர் தொகுதியை கட்டாயம் தமாகாவுக்கு கொடுக்க வேண்டும் என்பதும் அக்கட்சியின் நிலைப்பாடாம். ஆனால் கிள்ளியூர் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்ட அத்தனை தொகுதிகளையும் அதிமுகவிடம் கேட்போம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். இப்போது கிள்ளியூர் தொகுதியை முன்வைத்து தமாகா- பாஜக இடையே மல்லுக்கட்டு நடந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications