5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி ஏன் இழுபறி? விஜய்யின் பயிர்க்கடன் வாக்குறுதியில் எழும் சந்தேகங்கள் என்ன?
சென்னை: சென்னை அரசியலில் ஒரு புதிய வாக்குறுதி வெளியாகியுள்ளது.. விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி என்ற தவெக தலைவர் விஜய் அறிவிப்பு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதுடன், அதன் நடைமுறை சாத்தியம் குறித்து தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.. இந்த திட்டம் உண்மையில் நன்மையா அல்லது மாநில பொருளாதாரத்திற்கு சவாலா என்ற விவாதம் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது..
தமிழக அரசியலில் 'தேர்தல் வாக்குறுதி' என்பது மக்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

5 ஏக்கர் நிலம் - பயிர்க்கடன் தள்ளுபடி
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு கடனும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்பதே அந்த வாக்குறுதி.
இந்த வாக்குறுதி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொருளாதார வல்லுநர்களிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலன் சார்ந்த இந்த அறிவிப்பு உணர்வுப்பூர்வமாக வரவேற்கப்பட்டாலும், மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைகள் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்குமா என்ற கேள்வியே இப்போது பிரதானமாக எழுப்பப்படுகிறது.
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி
பொதுவாக, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் தன்னிச்சையாக இயங்கும் நிதி நிறுவனங்கள் அல்ல. இவை நபார்டு எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடமிருந்து பெறப்படும் நிதி மற்றும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் வைப்புத்தொகையை வைத்தே விவசாயிகளுக்குக் கடன் வழங்குகின்றன.
ஒரு அரசு கடன் தள்ளுபடி செய்யும்போது, அந்தத் தொகையை அரசுதான் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவரை நடைமுறையில் இருந்த 5 ஆண்டு காலத் தவணை முறை என்பது கூட்டுறவு சங்கங்களை கடும் நிதி நெருக்கடியில் தள்ளியது என்பது நிதர்சனம்.
ரிசர்வ் வங்கி ரூல்ஸ்
இந்தச் சூழலில்தான் 2024ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு, அரசியல் கட்சிகளின் தள்ளுபடி அரசியலில் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க முயன்றுள்ளது. தள்ளுபடி செய்யப்படும் தொகையை அரசு இழுத்தடிக்காமல், 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
அப்படி வழங்கத் தவறினால், அந்தத் தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலேயே நிலுவையாகக் கருதப்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வெறும் 2 மாதங்களுக்குள் திரட்டி வழங்குவது என்பது நிர்வாக ரீதியாக மிகப் பெரிய சவாலாகும். திமுக போன்ற அனுபவம் வாய்ந்த கட்சிகள், கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டே இப்போதைய சூழலில் இத்தகைய வாக்குறுதிகளைக் கவனமாகத் தவிர்த்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, விஜய் தனது பிரச்சாரங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தே அதிக அழுத்தம் கொடுத்துப் பேசி வருகிறார். நகைக்கடன் தள்ளுபடி குறித்து அவர் இதுவரை நேரடியான அல்லது விரிவான வாக்குறுதிகளை முன்வைக்கவில்லை.
நகைக்கடன் தள்ளுபடி
பொதுவாக, தமிழக அரசியலில் விவசாயக் கடன் தள்ளுபடியும், 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடியும் இரட்டை வாக்குறுதிகளாகவே பார்க்கப்படும். ஆனால், விஜய் தற்போது விவசாயக் கடன்கள் மற்றும் நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். ஒருங்கிணைந்த கூட்டுறவுத் துறையில் நகைக்கடன் தள்ளுபடி என்பது அரசுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையைத் தரக்கூடியது என்பதால் அவர் இதைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.
இந்த வாக்குறுதி என்பது விவசாயிகளின் துயரைத் துடைக்க ஒரு தற்காலிகத் தீர்வாக அமையலாம். ஆனால், ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்காமல் இதனைச் செய்ய வேண்டும்.
விஜய் வாக்குறுதி சாத்தியமா?
கடன் தள்ளுபடியால் உண்மையான ஏழை விவசாயிகள் பலன் பெறுகிறார்களா அல்லது வசதி படைத்தவர்கள் இதன் நிழலில் ஆதாயம் அடைகிறார்களா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும். தற்போதைய ரிசர்வ் வங்கி கெடுபிடிகளுக்கு இடையே, இதற்கான முறையான நிதி ஆதாரத்தை விஜய் எப்படித் திரட்டப்போகிறார் என்ற விளக்கம் அளிக்கப்பட்டால் மட்டுமே இது முதிர்ச்சியான அரசியலாகப் பார்க்கப்படும். வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், செயல்படுத்தக்கூடிய செயல்திட்டமாக மாற்றுவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.












Click it and Unblock the Notifications