ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்!
சென்னை: ஈரான்-அமெரிக்கா போர் உச்சத்தில் இருக்கிறது. பொதுவாக இப்படி சர்வதேச அளவில் பஞ்சாயத்துகள் வெடிக்கும்போதெல்லாம், தங்கத்தின் விலை உயரும். ஆனால், இந்த முறை பெரிய அளவில் விலை உயரவில்லை. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறவில்லை.
சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது தங்கம் விலை குறைவது வழக்கம். அந்த வகையில் இப்போது டாலர் மதிப்பு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

தங்கம் விலை
போர் காலங்களில், எங்கு பணத்தை போட்டால் பாதுகாப்பாக இருக்கும் என பலரும் யோசிப்பார்கள். இப்படி யோசிக்கும்போது, கண் முன் வரும் முதல் ஆப்ஷன் தங்கம்தான். எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்தால் விலை அதிகமாகும். ஆனால், தற்போதைய மேற்கு ஆசிய மோதலின்போதும் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்காமல் மந்தமாகவே உள்ளது.
- குறைந்த தேவை
- அமெரிக்க டாலரின் வலிமை
- அதிக வட்டி விகிதங்கள்
- விநியோக உபரி
- மற்றும் வளைகுடா தங்க வர்த்தகத் தடங்கல்கள்
ஏன் விலை உயரவில்லை?
இது 4ம் தான் தங்கம் பெரிய அளவுக்கு விலை உயராமல் இருப்பதற்கு காரணம். அமெரிக்க டாலரின் வலிமையே முக்கிய காரணி. சர்வதேச அளவில் தங்கம், அமெரிக்க டாலரில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டாலர் மதிப்பு உயர்ந்தால், தங்கம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அது விலை உயர்ந்ததாகி, வாங்கும் ஆர்வத்தைக் குறைக்கிறது. எனவேதான் தற்போது தங்கம் விலை உயரவில்லை.
தங்கத்துக்கு மாற்று
மறுபுறம் போர், கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, உலகளாவிய பணவீக்க அச்சத்தை தூண்டுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது, மத்திய வங்கிகள் (அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் உட்பட) விலைகளைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. எனவே தங்கத்தில் காசு போடுவதை விட, பாண்டு பத்திரங்களில் காசு போட்டால், அதிக வட்டி கிடைக்கும். எனவேதான் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள்.
இந்தியாவின் நிலைமை
இந்தியாவில், கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், நகைத் தேவை பலவீனமாகியுள்ளது. இந்த விலை உயர்வு வாங்குபவர்களுக்கு தங்கத்தை கட்டுப்படியாகாதாக மாற்றிவிட்டது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அதிக இறக்குமதிகளால், நகைக்கடைக்காரர்களிடம் போதுமான இருப்பு உள்ளது. இது தற்காலிக விநியோக உபரியை உருவாக்கியுள்ளது.
போக்குவரத்து தடங்கல்
வளைகுடாவில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடங்கல்களும் சந்தையைப் பாதித்தன. உலகின் முக்கிய தங்க வர்த்தக மையமான துபாய், போர் காரணமாக விமானம் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. எனவே பலரும் தங்கத்தை தள்ளுபடி விலையில் விற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு போரின் போதும் தங்கத்தின் விலை உயராது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. அமெரிக்க டாலரின் வலிமை, அதிக வட்டி விகிதங்கள், பலவீனமான நகைத் தேவை மற்றும் இந்தியாவில் உபரி விநியோகம் ஆகியவை புவிசார் அரசியல் மோதல்களால் தங்கம் விலை உயராமல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications