தங்கம் இருந்தாலும் வேஸ்ட்.. திடீரென நகைக் கடனை நிறுத்திய கூட்டுறவு வங்கிகள்! கையை பிசையும் மக்கள்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவில் திடீரென உயர்ந்து, பொதுமக்களையும் வியாபாரிகளையும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 வரை உயர்ந்துள்ளதால், தங்கம் வாங்க நினைத்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு வங்கிகள் தங்க நகை கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நகை அடமானக் கடனை நம்பி இருந்த ஏழை, நடுத்தர குடும்பங்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, மேலும் தங்கத்தில் முதலீடு அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன்பின்னர் தங்கம் விலை ஏறுமுகமாகவே பயணித்து வந்தது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வு
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தமாக ரூ.14,720 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.425 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.25,000 உயர்ந்து ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இவ்வாறு உயர்ந்துள்ள சூழலில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாரத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நகை கடன் நிறுத்தம்
மணப்பாறை மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் 12 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக புதிய நகை கடன் வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தங்களின் அத்தியாவசிய செலவுகள், விவசாய பணிகள், மருத்துவ தேவைகள் உள்ளிட்டவற்றுக்காக கூட்டுறவு வங்கிகளை முழுமையாக நம்பி வருகின்றனர்.
கூட்டுறவு வங்கிகள்
அவசர தேவைக்கு நகையை அடமானம் வைத்து குறைந்த வட்டியில் கடன் பெறுவது தான் இவர்களின் வழக்கமான நடைமுறை. ஆனால், சமீப காலமாக வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்களிடம் "போதிய நிதி இல்லை" என கூறி நகை கடன் வழங்க மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மொண்டிப்பட்டி கூட்டுறவு வங்கியில் நகை அடமானக் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு கடன் மறுக்கப்பட்ட சம்பவம், மாவட்ட ஆட்சியர் வரை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்க நகை கடன் பிரச்சனை
இதற்கு விளக்கம் அளித்த வங்கி நிர்வாகம், மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து தேவையான நிதி வரவில்லை என்றும், ஏற்கனவே நகை அடமானக் கடன் பெற்ற பலரும் நகையை மீட்டு செல்லாததால் புதிய கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இதே நிலை தொடர்வதால், தினசரி பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகை கடன் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் நகை கடன்
இதனால், விவசாய செலவுகள், குடும்ப தேவைகள், கல்வி செலவுகள் போன்றவற்றை சமாளிக்க முடியாமல், அதிக வட்டி வசூலிக்கும் தனியார் வங்கிகள் மற்றும் அடகு கடைகளின் கதவுகளை பொதுமக்கள் தட்டும் நிலை உருவாகியுள்ளது. தங்கம் விலை உயர்வும், அதே நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்காத சூழலும் சேர்ந்து, கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications