போரால் தங்கம் விலை என்னவாகும்.. 16 ஆயிரம் கிலோ தங்கம் வைத்துள்ள நகை அதிபர் சொல்வதை கேளுங்க!
சென்னை: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வரும் நிலையில், சாமானிய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரின் பார்வையும் இப்போது தங்கத்தின் மீதே குவிந்துள்ளது. இந்த நிலையில்தான் உலகின் மிகப்பெரிய நகை நிறுவனங்களில் ஒன்றான 'ஜாய் ஆலுக்காஸ்' குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ், தங்கத்தின் விலை வரும் காலங்களில் கற்பனை செய்ய முடியாத உயரத்தை எட்டும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
துபாயில் ப்ளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்கள் தங்கத்தின் மதிப்பை மேலும் உயர்த்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
பாதுகாப்பான முதலீடு தங்கம்
இந்தத் தாக்குதல்கள் நடந்த சமயத்தில் துபாயிலேயே தங்கியிருந்தார் ஜாய் ஆலுக்காஸ், உலகம் எப்போதெல்லாம் பதற்றமடைகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை மட்டுமே நாடுகிறார்கள் என்பதை உறுதிபடக் கூறுகிறார்.
அமெரிக்கப் பொருளாதாரம் சீராகும் வரை அல்லது உலக அளவில் உண்மையான அமைதி திரும்பும் வரை, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்பட வாய்ப்பில்லை என்பதே அவரது ஆணித்தரமான கருத்து.
75 சதவீதம் வரை உயர்வு
கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 75 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 5,000 டாலர் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. சுமார் 5.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட ஆலுக்காஸ், தனது 200-க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 16,000 கிலோ தங்கம் மற்றும் ஆபரணங்களைக் கையிருப்பில் வைத்துள்ளார்.
விலை உயரும்போது கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும் கூடுகிறது என்றாலும், புதிய இருப்பு வாங்கும்போது அதிக முதலீடு தேவைப்படுவது ஒரு சவாலாகவே இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்பதால், விலை ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க முடிவதாகவும் அவர் விளக்குகிறார்.
தங்க கட்டிகள் மீது மோகம்
இந்த விலை உயர்வு நுகர்வோரின் வாங்கும் முறையிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக ஆபரணங்களாக மட்டுமே தங்கத்தை வாங்கி வந்தவர்கள், இப்போது முதலீட்டு நோக்கில் 10 கிராம் மற்றும் 50 கிராம் எடையுள்ள வெள்ளி மற்றும் தங்கக் கட்டிகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
விலை உயர்வால் நுகர்வோரின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தாலும், திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்காகக் குறைந்த எடையுள்ள ஆபரணங்களுக்கு இப்போது மவுசு கூடியுள்ளது. குறிப்பாக இந்திய வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதை ஒரு கலாச்சார கடமையாகவே கருதுவதால் விற்பனை குறையவில்லை என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.
மதிப்பை இழக்காத தங்கம்
தனது தந்தை கேரளாவில் தொடங்கிய ஒரு சிறிய கடையை, இன்று 12 நாடுகளில் 178 கிளைகளாக மாற்றியுள்ளது ஜாய் ஆலுக்காஸ். 1980-களில் வெளிநாடுகளில் கால்பதித்த இந்த ஜுவல்லரி, தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் நியூசிலாந்து எனத் தனது கடைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. உலக அரசியல் சூழல் எப்படி மாறினாலும், தங்கம் எப்போதும் தனது மதிப்பை இழக்காது என்ற நம்பிக்கையுடன் உள்ளார் ஜாய் ஆலுக்காஸ்.












Click it and Unblock the Notifications