தங்கம் விலை காலி.. 1983க்குப் பிறகு நடக்காத மிகப்பெரிய சம்பவம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று அதிரடியாகச் சரிந்தது, ஒரு அவுன்ஸ் 4,500 டாலருக்கும் கீழ் சென்றது. இது 1983-ம் ஆண்டிற்குப் பிறகு தங்கம் சந்தித்துள்ள மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
என்ன நடக்கிறது சந்தையில்?
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 'COMEX' தங்க முன்பேர வர்த்தகத்தில் (Gold Futures), விலை 2.47 சதவீதம் குறைந்து 4,492 டாலராக வர்த்தகமானது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது, பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் இதர கமாடிட்டிகளுக்கான (Commodities) மவுசு தற்காலிகமாகக் குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
வெள்ளியின் நிலையும் மோசமாகவே உள்ளது. ஒரே நாளில் 5 சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளி 70 டாலருக்கும் கீழ் சென்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவுன்ஸ் வெள்ளி 119 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது பெரும் சரிவைக் கண்டுள்ளது முதலீட்டாளர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் இன்றைய விலை நிலவரம்
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) இன்று விடுமுறை என்பதால் வர்த்தகம் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும், நாட்டின் முக்கிய நகரங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை (Spot Prices) பின்வருமாறு உள்ளது:
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ. 1,36,540
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ. 1,48,900
வெள்ளி (1 கிலோ): சுமார் ரூ. 2,54,000
மீண்டும் ஒரு 1983? அன்று என்ன நடந்தது?
தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. 1979-80 காலகட்டத்தில் ஈரானியப் புரட்சி மற்றும் பனிப்போர் காரணமாகத் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 850 டாலர் வரை எகிறியது. ஆனால், 1983-ல் அந்த 'பபுள்' (Bubble) உடைந்தது.
அப்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராக இருந்த பால் வோல்கர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தினார். இதனால் டாலர் மற்றும் பாண்டுகளின் மதிப்பு உயர்ந்து, தங்கம் விலை 15-20 சதவீதம் வரை சரிந்து 375-400 டாலர் நிலைக்கு வந்தது. அதே போன்றதொரு சூழல் இப்போது மீண்டும் உருவாகிறதோ என்ற அச்சம் சந்தையில் எழுந்துள்ளது.
நிபுணர்களின் கணிப்புப்படி, தங்கம் விலை இப்போதைக்கு ஒரு நிலையற்ற தன்மையிலேயே (Volatility) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு மற்றும் வலுவான டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவதால், வரும் வாரங்களில் விலை மேலும் சிறிது சரிய வாய்ப்புள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்தால், முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கித் திரும்பக்கூடும், இது விலையை மீண்டும் உயர்த்த வழிவகுக்கும். எனவே, குறுகிய காலத்தில் விலை வீழ்ச்சி நீடித்தாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு வலுவான மீட்சியைச் சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள் இந்தியச் சந்தையில் திங்கட்கிழமை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications