நகை வியாபாரிகள் தந்த சூப்பர் அப்டேட்.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பாதுகாப்பான முதலீடா தங்கம்?
சென்னை: உலக நாடுகளில் உள்ள வங்கிகள், கருவூலங்கள், சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது தற்போது திரும்பியுள்ளது. அதிகப்படியாக தங்கத்தில் அவர்கள் முதலீடு செய்வதால் தான், இப்படியான விலை ஏற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.. இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து ஏறவே செய்யும் என்பது நகை வியாபாரிகளின் கருத்தாக உள்ளது.
வட்டி விகிதங்கள் குறையும் போக்கு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் கையிருப்பாக சேர்த்துவருவது காரணமாக சமீப காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்த உயர்வு அடுத்த ஆண்டிலும் தொடருமா என்பது முதலீட்டாளர்களிடையே விவாதமாக உள்ளது.
சில சந்தை நிபுணர்கள் சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸுக்கு 5,000 டாலர் வரை செல்லலாம் என கணிக்கிறார்கள். அதே நேரத்தில், தங்கம் தற்போது உச்சத்தில் இருப்பதால் நகை விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், உலகளாவிய தங்க தேவையில் பாதிப்பு ஏற்பட்டு விலை சரிவடையும் வாய்ப்பும் உள்ளது.
சந்தை நிபுணர்கள்
இந்த சூழலில், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை வரும் காலங்களிலும் உயர்வை தொடரும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி ஒரு சேனலுக்கு தந்துள்ள பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் சொல்லும்போது, "புதிய ஆண்டிலும் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்..தங்கத்தின் விலை தினந்தோறும் ஒரே திசையில் நகராது,, சில நாட்களில் உயர்வும் சில நாட்களில் குறைவுமாக இருக்கும். இருந்தாலும் விலை குறையும் போது, அது உயர்ந்த அளவுக்கு சமமாக இருக்காது என்றும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் தொடர்ந்து உயர்வை நோக்கி செல்லும்.
பொருளாதார போட்டி
தற்போதைய சூழலில் நேரடி போர் அச்சம் இல்லாவிட்டாலும், உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார போட்டி மற்றும் வர்த்தக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.. இதனாலும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது..
டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் தங்கத்தின் விலையை உயர்த்தும் காரணியாகும்..
உலகில் எந்த ஒரு நாட்டின் நாணயமும் தங்கத்திற்கு முழுமையான மாற்றாக இல்லை .. அதனால் மத்திய வங்கிகள் மற்றும் அரசுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி கையிருப்பாக வைத்துக் கொண்டிருக்கின்றன.. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தங்கம் மீண்டும் பண்டமாற்று மதிப்பைப் பெறும் வாய்ப்பும் உள்ளது..
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும் நகை விற்பனை முற்றிலும் பாதிக்கப்படவில்லை.. திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்காக மக்கள் இன்னும் தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.. ஆனால் முன்பை விட வாங்கும் அளவு குறைந்துள்ளது..
அதே நேரத்தில் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளதாலும் பொருளாதார வளர்ச்சியாலும் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.12,500 வரை உயர்ந்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.. இதுவே தங்கம் நீண்டகால முதலீடாக வலுவாக இருப்பதற்கான தெளிவான சான்று என்று ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications