தங்கத்தில் முதலீடு போதும்.. நிலத்தில் முதலீடு.. ரூ.1 லட்சத்துக்கு குண்டுமணி நகை? முடியல: பிரபலம்
சென்னை: தங்கத்தின் விலை இன்று 2வது நாளாக குறைந்துள்ளது. பெரிய அளவில் விலை சரிவு இல்லை என்றாலும்கூட, எதிர்பார்த்தபடி கடும் விலை உயர்வு ஏற்படாமல் சற்றே குறைந்துள்ளது.. எனினும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் தென்பட்டு வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, நிலத்தில் முதலீடு செய்துவிடுவதே மேல் என்று டாக்டர் காந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.275 சரிந்து ரூ.9,015 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,200 குறைந்து ரூ.72,120 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.300 சரிந்து ரூ.9,835 ஆகவும், சவரன் விலை ரூ.2,400 குறைந்து ரூ.78,680 ஆகவும் இருந்தது. அட்சய திருதியை நெருங்கி வரும் வேளையில் பொது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதேசமயம், தங்கம் விலை மேலும் குறைந்திருப்பது தற்காலிகமே என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.. அவசியமான சுப காரியங்களுக்காக நகை வாங்குவது நல்லதுதான் என்றபோதிலும் முதலீடு என்று வரும்போது, மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அலர்ட் செய்கிறார்கள்.

ரஷ்ய - உக்ரைன் போர்
இப்படிப்பட்ட சூழலில், BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "பொருளாதார சரிவு காரணமாகவே நாடுகளுக்குள் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. உக்ரைனில் பெட்ரோல் இருக்கிறது.. இதை பிடுங்கி கொள்ள ரஷ்யா பார்க்கிறது.. சோவியத் யூனியனாக சேர்ந்து இருந்தபோதுவரை ரஷ்யா செழிப்பாக இப்போது பிச்சைக்கார நாடாக உள்ளது.
இன்று முதலாளித்துவ நாடு சீனா.. இதற்கு காரணம் மனித உழைப்பை அவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்கள் இயந்திரத்தை நம்பவில்லை. தங்கத்துக்கான மதிப்பு குறையவில்லைதான்..
தங்கத்தில் முதலீடு
ஆனால், ஒரு அளவுக்கு மேல் போய்விட்டால், தங்கத்துக்கான மதிப்பு போய்விடும்.. தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று பலரும் நினைக்கிறார்கள்.. இப்போது 1 லட்சம் ரூபாய் கொண்டுபோய் தந்தால், குண்டுமணி அளவு மட்டுமே தங்கம் தர்றாங்க.. இதுக்கு எதுக்கு 1 லட்சம் செலவு செய்யணும்? அதிலும், நடுத்தர மற்றும் கீழ்த்தர மக்களால் தங்கத்தை இனி நினைக்கவே கூடாது. நான் படிக்கும் காலத்தில் ஒரு பவுன் 13 ரூபாய் இருந்தது.. அந்த காலகட்டத்தில் அந்த விலை அதிகம்.
தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, இனி நிலத்தில் சேமிப்பதுதான் வழி.. தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம், பொருளாதார வீழ்ச்சிதான்.. அதுமட்டுமல்லாமல், அந்தந்த நாட்டு கரன்சிகளுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. உற்பத்திகள் தற்போது குறைந்துவிட்டன.. கடந்த 10 வருடங்களாக எங்குமே தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை. இந்த 10 வருட பாஜக ஆட்சியில், இந்தியா முழுக்க தொடங்கப்பட்ட தொழிற்சாலை எத்தனை? ராமர் கோயில் மட்டும்தான் கட்டினார்கள்..
AI தொழில்நுட்பம் குழப்பம்
இந்தியா என்றில்லை, எந்த நாட்டிலுமே தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை.. உற்பத்தி தொடங்கப்படவில்லை.. புது தளவாடங்கள் வந்திருக்கின்றனவா?
அதைவிட முக்கியமாக AI தொழில்நுட்பம் வந்தபிறகு எந்த தொழிலுக்கு போவதொன்று பலரும் குழம்பி உள்ளனர்.. பெட்ரோல், எண்ணெய் சம்பந்தப்பட்ட அத்தனை மெக்கானிக்கல் தொழில்களும் முடங்கிவிட்டன.. மோட்டார் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் வந்துவிட்டது..
கரன்சி மதிப்பு
உங்கள் நாட்டு பணத்துக்கு மதிப்பு இருக்க வேண்டுமானால், ரிசர்வ் வங்கியில் குறிப்பட்ட அளவு தங்கம் இருக்க வேண்டும் என்று இருப்பு காட்ட வேண்டும்.. அப்போதுதான், உங்களது கரன்சிக்கு மதிப்பு கிடைக்கும்... தங்கத்தை அதிகமாக அமெரிக்கா, அடுத்து ஜெர்மன் வைத்திருக்கிறது. ஒருகாலத்தில் இங்கிலாந்திலும் நிறைய தங்கம் குவிந்து கிடந்தது. ஆனால் இன்று இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இன்று தங்கம் இங்கிலாந்திலும் இல்லை. பெட்ரோல் விலை ஏறினால் அதற்கு இணையாக தங்கம் விலையும் ஏறும், தங்கம் விலை ஏறினால் பெட்ரோல் விலையும் ஏறும்.. இவை இரண்டும் ஏறினால் அது சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விலையும் ஏறும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications