"தங்கம் விலை நிச்சயம் உயரும்!" இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்..அது சரி இன்னும் எவ்வளவு தான் ஏறுமாம்?
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், மிடில் கிளாஸ் மக்களால் கூட தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயர என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், வரும் காலத்தில் இது மேலும் எந்தளவுக்கு உயர வாய்ப்பிருக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.355க்கு மேல் உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் மிக விரைவிலேயே ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,000ஐ தொட்டுவிடும் என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். தங்கம் விலை இப்படித் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களே தங்கம் விலை உயரக் காரணமாக இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3500 டாலரை தாண்டிவிட்டது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. அமெரிக்காவில் குறையாமல் இருந்தால் இந்தியாவிலும் தங்கம் விலை குறையாது. என்னைப் பொறுத்தவரை 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9800 வரை செல்லும். ஆனால், அதற்கு முன்பே நான் சொன்னது போல 5% ஏற்றம் வந்துவிட்டது.
இன்னும் எவ்வளவு உயரும்
இப்போது வெறுமன ஜிஎஸ்டியை சேர்த்தாலே தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. சீக்கிரமே தங்கம் விலை ஜிஎஸ்டி இல்லாமலேயே ரூ.10 ஆயிரத்தைத் தொட்டுவிடும். 22 கேரட் தங்கமே ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.10 ஆயிரத்தைத் தொட்டுவிட்டால் 24 கேரட் தங்கம் ஸ்டாம்பிங் சார்ஜ் உடன் சேர்த்து ரூ.11000ஐ தாண்டிவிடும். எனவே, தங்கம் விலை நிச்சயம் உயரும். இங்கிருந்து 10- 15% வரை உயர வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4000 டாலரை தாண்டும். உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள். இதனால் அவர்கள் தங்கம் விலை ரொம்ப கீழே செல்ல விடமாட்டார்கள். அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையில் இதெல்லாம் நடக்கிறது" என்றார்.
தங்கம் விலை
அமெரிக்க மத்திய வங்கி ஒவ்வொரு முறையும் 0.25% வட்டி குறைக்கும்போதும் தங்கம் விலை இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் வரும் செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. அதில் வட்டி விகிதம் குறைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை மேலும் உயரும் என்றே சொல்கிறார்கள்.
காரணங்கள்
அதேபோல இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க நாம் அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. இதுபோல இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும் கூட தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோக இந்தியா அமெரிக்கா வர்த்தகப் பதற்றம், சர்வதேச போர்ச் சூழல் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications