சென்னைவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.200 அபராதம் ரத்து.. ஹைகோர்ட் உத்தரவு.. என்னனு பாருங்க
மெட்ரோவின் ரூ.200 அபராதத்தை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது
சென்னை: மெட்ரோ ரயில் வளாகத்திலும், ரயிலிலும் முக கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் தொற்று உச்சத்தில் இருந்தது.. பிறகு மறுபடியும் அதன் தாக்கம் குறைந்த நிலையில், 2வது அலை பரவலில் அதிகமாகிவிட்டது. எனவே, தமிக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.
மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது..

மாஸ்க்
இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களுக்குள் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகமும் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் இதற்காக ஒரு பத்திரிக்கை செய்திக் குறிப்பை வெளியிட்டது. ஆனாலும் பலர் இதை பின்பற்றாமலேயே இருந்தனர்.. அதாவது மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நுழையும்போது மட்டுமே மாஸ்க் போட்டுவிட்டு வந்து, பிறகு ரயிலில் ஏறியதுமே அந்த மாஸ்க்கை நீக்கிவிடுவது வழக்கமாக இருந்தது..

குழுக்கள்
ரயில் நிலையங்களில் கண்காணிக்க முடிகிறதே தவிர, ரயில்களுக்குள் மாஸ்க் போடுவதை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டது.. எனினும், இதற்காகவே ரயில்நிலைய வளாகத்தில் தொற்று விதிகளை மீறுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க 10 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படவும் செய்தனர்.. ஆனால், மெட்ரோவின் இந்த அபராத அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அறிவிப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றி உள்ளதாகவும், அந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அறிவிப்பை அமல்படுத்துவதற்கான அதிகாரிகள் எவரையும் குறிப்பிடவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மெட்ரோ நிறுவனம்
மேலும், கடந்த செப்டம்பர் 13 ம் தேதி வரை 87ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகையை மாநில கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அதேபோல, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரயில் சட்டப்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிறுவனங்களும் இந்த அபராதத்தை விதிப்பதாகவும் தெரிவித்தார்.

உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிவிப்பு நல்ல நோக்கமாகவும், பொது நலனை கருத்தில் கொண்டு இருந்தாலும்கூட, அதற்கு சட்டத்தில் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும் என்றும், சட்ட அதிகாரம் பெறாத இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்... ஏற்கனவே வசூலித்த அபராததொகையை மெட்ரோ ரயில் நிறுவனம் வைத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications