ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் சம்பளம் உயருது! கமிட்டி போட்ட தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய ஏதுவாக குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊதியம் மறுபரிசீலனை செய்ய கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவில் நிதி நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குனர், கூட்டுறவுத்துறை துணைச் செயலாளர் மற்றும் மண்டல பதிவாளர்கள் அதில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ரேஷன் கடை ஊழியர்கள்
ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்குவது, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
பல்வேறு கோரிக்கைகள்
கடந்த மாதமும் சென்னை எழும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். குடோனில் இருந்து உணவுப்பொருட்களை ஏற்றும்போது கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து அளவிட்டு அனுப்ப வேண்டும் என்றும், பிஓஎஸ் மெஷினை கம்ப்யூட்டர், எடை தராசுடன் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மேலும் மூட்டைகளை எடையிடுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டருடன் இணைந்த எடை தராசை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதேபோன்று ரேஷன் கடைகளில் கைரேகை வைக்கும் போது நெட்வொர்க் பிரச்சினையின் காரணமாக ஒவ்வொருவருக்கும் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அரசாணை வெளியிட்ட அரசு
இதையடுத்து அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய ஏதுவாக 10 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நியாயவிலைக் கடை பணியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்களின் தொடர் கோரிக்கையை அடுத்து இந்த அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி, மருத்துவப்படி உள்பட
இதன்படி கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் ஆகியோருக்கு புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் அகவிலைப்படி, மருத்துவப்படி உள்ளிட்ட அனைத்து படிகள் வழங்குதல், தேர்வு நிலை, தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்குதல் ஆகியன குறித்தான பரிந்துரையை இக்குழு வழங்கும்.
கூடுதல் நிதிச் செலவினம்
பரிந்துரைக்கப்படும் ஊதிய விகிதத்தின்படி, திருத்தியமைக்கப்படும் ஊதியத்தில் முரண்பாடுகள் ஏதும் ஏற்படாத வண்ணம், குழுவின் அறிக்கையினை தயார் செய்திடவும், குழு அளிக்கும் பரிந்துரையின் படி கூட்டுறவு நிறுவனங்களுக்கு மற்றும் அரசுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச் செலவினம் மற்றும் இக்கூடுதல் செலவினத்தை கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்கும் திறன் ஆகியவற்றை பரிசீலித்து அறிக்கை தயா ரித்து அளிக்கவும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த 10 பேர் கொண்ட குழுவில் நிதி நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குனர், கூட்டுறவுத்துறை துணைச் செயலாளர் மற்றும் மண்டல பதிவாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications