நோட் பண்ணிக்குங்க.. மொத்தம் 14 மாவட்டங்களில் இன்னைக்கு செம மழை இருக்காம்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களுக்கு பலத்த மழை இருக்கக்கூடும் எஎன்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிவிட்டது.. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதேபோல, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது.. இதை 2 நாட்களுக்கு முன்பே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

பலத்த காற்று வீசும்
இதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.. அதில், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பலத்த காற்று மேற்கண்ட பகுதியில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

வெப்ப சலனம்
அன்படி, நேற்றைய தினம் அதாவது 2-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்தது.. இந்நிலையில், இன்றும் தமிழகத்தின் பிரதான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.. குறிப்பாக 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.. மேல் அடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யுமாம்.

காற்று - மீனவர்கள்
மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும் என்றும், லட்சத்தீவு, கேரளா, அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 55 கிமீ வேகத்திலும், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 50 கிமீ வேகத்திலும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகள்
இதனிடையே, நாட்டில், பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அதாவது, முறை, பருவ மழை இந்தியாவிலும், தென் தீபகற்பத்திலும் இயல்பை விட அதிகமாக 106 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்றும், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 96 முதல் 106 சதவீதம் வரையும் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் அப்பாவு
இதனிடையே, திருநெல்வேலி பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது... தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், 86 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் சபாநாயகர் அப்பாவு.. இதன்மூலம், திருநெல்வேலியில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 86 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications