வருவாய் ஆய்வாளர் ஒப்புதல் இல்லாமலேயே சான்றிதழ்? தமிழக அரசின் அசத்தல் பிளான் இதுதான்
சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை சரிபார்த்து வழங்கும் பணியில் வருவாய் ஆய்வாளர்கள் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள்.. இப்போது இந்த சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்கு, அவர்களின் சரிபார்ப்பு நடைமுறையை நீக்கத் தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் என்னாகும் தெரியுமா?
தமிழ்நாட்டில் வருவாய்த் துறையின் மிக முக்கிய கள அதிகாரியாக செயல்படும் Revenue Inspectors அதாவது வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்க கூடியவர்கள்..

வருவாய் அலுவலர்கள்
இவர்களின் முக்கியமான பணிகள் என்னென்ன தெரியுமா? தங்களின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்ற பல்வேறு அரசுச் சான்றுகளுக்கான விண்ணப்பங்களை நேரில் சென்று கள ஆய்வு செய்து, உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி வட்டாட்சியருக்கு பரிந்துரைப்பதாகும்.
அதுமட்டுமல்ல, கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை கண்காணிப்பது, நில வருவாய் மற்றும் அரசு நிலுவைத் தொகைகளை வசூலிப்பது, அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் பாதுகாப்பது மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளின் போது வட்டாட்சியருக்கு உதவுவது போன்ற பணிகளையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.
அரசின் நலத்திட்டங்கள்
அதேபோல, பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை முன்னின்று நடத்துவது, அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வது, இப்படியான இவர்களின் களப்பணிகளை செய்வதிலும் முதன்மையானவர்கள் இவர்கள்தான்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பெறுவதற்கு, ஆன்லைன் மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து வருகின்றனர்.
இப்போதைய நடைமுறைப்படி, இந்த விண்ணப்பங்கள் முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லும். அவர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அந்த விண்ணப்பம் RI அதாவது வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும். அவர் மறுபடியும் அதை சரிபார்த்து வட்டாட்சியர் எனப்படும் தாசில்தாரருக்கு பரிந்துரை செய்வார். கடைசியாக தாசில்தார் ஒப்புதல் அளித்த பிறகே மக்களுக்கு சான்றிதழ் கிடைக்கும்.
ஆர்ஐ ஒப்புதல் - புதிய நடைமுறை
இந்த 3 கட்ட சோதனைகளால், சான்றிதழ்கள் கைக்கு வந்து சேருவதற்கு பல நாட்கள் ஆகின்றன. இதனால் பொதுமக்கள் அதிகமான சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்த தாமதத்தை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு இப்போது ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறதாம். அதன்படி இனிமேல் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையில் வருவாய் ஆய்வாளர்களின் ஒப்புதல் தேவை இருக்காது. கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே சரிபார்த்து அனுப்பும் கோப்புகள், நேரடியாக தாசில்தார் பக்கமே சென்றுவிடும். தாசில்தார் உடனே அதற்கு கடைசி ஒப்புதலை அளித்துவிடுவார். இந்த புதிய நடைமுறையைதான் அரசு பரிசீலித்து வருகிறதாம்.
ஒருவேளை, இந்த புதிய ஆன்லைன் முறை நடைமுறைக்கு வந்தால், ஒரு முக்கியமான நிர்வாகக் கட்டம் குறையும். இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் மிக விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
முதற்கட்டமாக, சில குறிப்பிட்ட சான்றிதழ்களுக்கு மட்டும் இந்த முறையை சோதனை அடிப்படையில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications