விவசாயிகளுக்கு அறிவிப்பு.. நிலத்தடி நீருக்கும் வரி? கிளப்பியது யாரு? மத்திய அரசின் விளக்கம் பாருங்க
சென்னை: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெறுவார்கள். பயன்பாட்டுக்கு தகுந்தவாறு வரி விதிக்கப்படும்" என்று கூறியிருந்தார். இதுகுறித்து பல்வேறு செய்திகள் கசிந்த நிலையில் மத்திய அரசு அதற்கு விளக்கம் ஒன்றை தந்துள்ளது..
நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுப்பதற்காக வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை நேற்று கூறியிருந்த நிலையில், விவசாயிகள் மத்தியில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
காரணம், இந்தியா முழுவதிலிருந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.. இதில், 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர், அதாவது கிட்டத்தட்ட 83 சதவீதம் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய திட்டங்களுடன் மத்திய அரசு
எனவே மிச்சமுள்ள நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதையும், நீர் வீணாக்கப்படுவதையும் தடுப்பதற்காக, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு, 22 புதிய திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளது..
ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அந்த திட்டங்களை, அந்தந்த மாநில அரசுடன் இணைந்து சோதனை முயற்சியில் ஈடுபடவும் தயாராகி வருகிறது.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெறுமானால், விவசாயிகளுக்கு தேவையான போதிய நீர் உறுதி செய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
நீர் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்தி, நீர் மேலாண்மையை மேம்படுத்தும் திட்டமாக இது இருந்தாலும், விவசாயிகள் தரப்பில் இது அதிர்வலையையே உண்டுபண்ணியிருக்கிறது..
எதிர்க்கட்சிகள் கண்டனம்
மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.. மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிப்பதா?
ஏற்கெனவே, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து இன்னல்களை சமாளிக்க முடியாமல் தமிழக விவசாயிகள் அவதிப்பட்டு வரும்போது, நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கிவிடும் என்பதால், நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் கூறியிருந்தனர்.
பாஜக மறுப்பு - விளக்கம்
ஆனால், இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.. தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, இதுகுறித்து கூறும்போது,"விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்தி பல்வேறு தமிழ் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதற்கு பலரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
உண்மையில், இது போன்ற எந்த ஒரு முடிவோ அல்லது கருத்தோ மத்திய அரசால் குறிப்பிடப்படவில்லை என்பதும், விவசாயம் மற்றும் தண்ணீர் ஆகிய இரு விவகாரங்களுமே மாநில அரசின் கீழ் உள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இல்லாத ஒன்றை இருப்பது போல், மத்திய அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் இந்த வதந்தியை 'ஒரு சில ஊடகங்கள்' பரப்பியதோடு, பாஜக அரசின் மீதான தங்களின் வெறுப்பை உமிழ்ந்துள்ளன. இது ஊடக 'அறம்' அல்ல, ஊடக 'புறம்' என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
மத்திய அரசு விளக்கம்
அதேபோல, தண்ணீருக்கு வரி விதிப்பு என்ற தகவலை மத்திய அரசும் மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சொல்லும்போது, "விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. நீருக்கு வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை.
மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர் பாட்டில் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார். விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம். வெளிப்படைத்தன்மை கருதியும் தவறான தகவல் பரப்பப்படுவதை தடுக்கவும் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications