தங்கத்தில் முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கங்களுக்கு குட்பை..! ரயில்வேயில் வந்த பெரிய மாற்றம்.. ஏன்?
சென்னை: இந்திய ரயில்வே துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு பாரம்பரியமான நடைமுறை இப்போது திடீரென முடிவுக்கு வந்துள்ளது... இதற்கான காரணமும் என்னவென்று தெளிவாக சொல்லப்படவில்லை.. ஆனால், ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
பொதுவாக, ரயில்வேயில் உயரிய பதவிகளில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரிகளின் சேவையை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கங்களை வழங்குவது வழக்கமாகும்..

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விடைபெறும் விழாவின் போது இத்தகைய பதக்கங்கள் வழங்கப்படுவது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது..
இந்திய ரயில்வே அமைச்சகம்
இந்த நடைமுறை பல வருட காலமாகவே பின்பற்றப்பட்டு வரும் ஒரு கவுரவ அடையாளமாகும். ஆனால் இந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு இந்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவானது அனைத்து மண்டல இரயில்வே பொது மேலாளர்கள் மற்றும் உற்பத்திப் பிரிவுகளின் தலைவர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், உற்பத்தி நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இருப்பில் உள்ள வெள்ளிப் பதக்கங்களை வேறு தேவைகளுக்காக மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
தங்க முலாம் வெள்ளி
அந்த சுற்றிக்கையில் "தற்போதுள்ள பதக்கம் வழங்கும் நடைமுறை இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் வெள்ளி பதக்கங்கள் பயனுள்ள மற்ற மற்ற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை..
குறிப்பாக, அரசு நிர்வாகத்தில் தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்கும், நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும் மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
வெள்ளி பதக்கங்கள்
அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன சூழலில் இத்தகைய சடங்கு ரீதியான பரிசுகளை விட, பணிகளை டிஜிட்டல் மயமாக்குவதும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதும் அவசியம் என்று அமைச்சகம் கருதுகிறது... பதக்கங்கள் தயாரிப்பதற்கான செலவு மற்றும் அதற்கான டெண்டர் நடைமுறைகள் போன்ற கூடுதல் வேலைப்பளுவை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த அறிவிப்பு ரயில்வே வட்டாரத்தில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இது அரசின் சிக்கன நடவடிக்கைக்கு ஒரு நல்ல உதாரணம் என்று பாராட்டுகிறார்கள்.. மற்றொரு தரப்பினரோ, அதிகாரிகளின் பல ஆண்டு உழைப்பிற்கு அடையாளமாக வழங்கப்பட்ட ஒரு கவுவரம் பறிபோய்விட்டதாக கருதுகிறார்கள்..
ரயில்வே அமைச்சகம்
இருந்தாலும் அமைச்சகத்தின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதால், இனிவரும் காலங்களில் ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த பதக்கங்களுக்கு பதிலாக சான்றிதழ்கள் அல்லது நினைவுப் பரிசுகள் போன்ற மாற்று வழிகள் பின்பற்றப்படுமா என்பது குறித்த தெளிவான விளக்கம் அந்தச் சுற்றறிக்கையில் விரிவாக குறிப்பிடப்படவில்லை.
ஆனால், கடந்த சில வருடங்களாகவே, தரம் குறைந்த, போலியாக வெள்ளி வழங்கப்பட்டதாக புகார்கள் கசிந்ததாம்.. ஒருவேளை இந்த அதிரடி அறிவிப்புக்கு, இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications