உ.பி கோரக்நாத் கோவிலில் தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை - என்ஐஏ கோர்ட் அதிரடி
கோரக்நாத் கோவிலில் தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: உத்தர பிரதேச மாநிலம் கோரக்நாத் கோவிலில் தாக்குதல் நடத்திய முர்தசா அப்பாசிக்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில், ஒரு ஆண்டிற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 272 கி.மீட்டர் தொலைவில் உள்ள நகரம் கோரக்பூர்.
ராப்தி நதியை ஒட்டி அமைந்துள்ள கோரக்பூரில் புகழ்பெற்ற கோரக்நாத் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்குதல் நடைபெற்றது.

போலீஸ் மீது தாக்குதல்
கோவிலுக்குள் அகமது முர்தாஸா அப்பாஸி என்பவர் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் போலீஸ் மீது ஆயுதங்களை கொண்டு அப்பாஸி தாக்குதல் நடத்தினார். இதில் போலீஸ் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய அப்பாஸியை மக்கள் துரத்தி பிடித்தனர்.

அப்பாஸிடம் விசாரணை
பின்னர் அப்பாஸியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 2015-ம் ஆண்டு மும்பை ஐஐடியில் படிப்பு முடித்தவர் என்பதும் கெமிக்கல் என்ஜினியரான முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியது தெரியவந்தது. அப்பாஸியின் ஆதார் முகவரி அடிப்படையில் நவி மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் சென்றனர். ஆனால், 2013-ம் ஆண்டிலேயே இந்த குடியிருப்பு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்பாஸியின் 4 வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அகமது முர்தாஸா அப்பாஸிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திடம் இருந்து நிதி உதவியையும் பெற்று நாசவேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் இருந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பயங்கரவாதி அகமது முர்தாஸா அப்பாஸி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மரண தண்டனை விதிப்பு
இது தொடர்பான வழக்கு சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்திய தண்டனை சட்டம் 121 -ன் கீழ் அப்பாஸிக்கு மரண தண்டனையை என்..ஐ.ஏ நீதிமன்றம் விதித்து அதிரடி தீர்ப்பை அளித்தது. அதேபோல், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307- கீழ் ஆயுள் தண்டனையும் அப்பாஸிக்கு விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக அகமது முர்தாஸா அப்பாஸிக்கு 2017 ஆம் ஆண்டு மனநல பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதற்காக பலமருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றதாகவும் கூறினர். இதனால், தனது மனைவியை பிரிந்து அப்பாஸி தனியாக வசித்து வந்ததாகவும் குடும்பத்தினர் கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications