இரவோடு இரவாக சூப்பர்.. அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு.. இனிமே எல்லாமே தமிழில் இருக்க வேண்டும்! சபாஷ்
சென்னை: அரசு ஊழியர்கள் அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்றும் சுற்றாணை குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் புதிய உத்தரவு ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அரசு அரசாணையும் வெளியிட்டிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதாவது, அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, வெளியீடு தொடர்பான திருத்த அரசாணையை வெளியிட்டிருந்தது.. அதில் அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதலாம், ஆனால் அரசை விமர்சிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள்
அந்த அரசாணையில், "எழுதும் திறமையுள்ளோர் இலக்கியம், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை, அரசின் கொள்கைகள், துறை சார்ந்த விளக்கங்கள் அடங்கிய நுால்களை எழுதும் முன், அரசின் அனுமதியை பெற வேண்டும்
அரசின் மீதான விமர்சனமோ, எதிரான கருத்துக்களோ, தாக்குதலோ இடம் பெறாது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெறாது என்ற நிபந்தனையுடன் கூடிய முன் அனுமதி பெறாமல், கலைப்பணிகளில் ஈடுபடவோ, புத்தகத்தை வெளியிடவோ கூடாது. முன் அனுமதி பெறாமல், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியமோ, காப்புரிமை தொகையோ பெறக்கூடாது. புத்தகத்தை விற்பனை செய்வதற்கோ, ஊக்குவிப்பதற்கோ தன் நேரத்தையும், அரசாங்க செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடாது" என்றெல்லாம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
தமிழில் அரசாணைகள்
இந்நிலையில், தமிழில் அரசாணைகள் வெளியிடுவதுடன், அரசுப்பணியாளர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தமிழிலே பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் தமிழக அரசாணை ஒன்று வெளியாகியிருக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அந்த அரசாணையில், "ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துமே தமிழ்
அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல் அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைக்கேற்றபடி ஆய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications