கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலைக்கு எதிராக நாதக நிர்வாகி மனு..அவசர விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
தவெக கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதில் முக்கியமானது கரூர் சம்பவம். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் சென்றிருந்தார். விஜயைக் காண்பதற்காக அதிகளவு மக்கள் கூடியிருந்தனர். அப்போது கரூரில் எதிர்பாராதவிதமாக நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பாவி மக்களின் துயரம் இப்போதும் ஆறாத ரணமாக உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விஜய், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாத தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கரூர் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஆனால் தவெக தலைவர் விஜய் கரூர் செல்லவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் அங்கிருந்து ஆறுதல் சொல்லாமல் விஜய் அவசர அவசரமாக சென்னை சென்றார். தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட கரூர் சென்று ஆறுதல் சொல்லவில்லை. இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடந்த 2025 அக்டோபர் மாதம், விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து சந்தித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கியிருந்தார்.
அப்போது, விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகியுள்ளார். இந்நிலையில் விஜய் வருகிற ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்கள் பயணமாக விஜய் கரூர் செல்லவுள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை விஜய் தொடங்கி வைக்கிறார்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. தவெகவின் இந்த அரசியல் நகர்வு விசாரணையை பாதிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வேலை வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்க மறுத்துள்ளது












Click it and Unblock the Notifications