பழைய ஓய்வூதிய திட்டம்.. இப்ப குறைந்தபட்ச பென்ஷன்.. அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு குட் நியூஸ் வருமா?
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், குறைந்தபட்ச பென்ஷன் கேட்டு அங்கன்வாடி ஊழியர்களும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்டும் கடிதம் அனுப்பும் போராட்டமும் துவங்கப்பட்டுள்ளது. என்ன காரணம்?
பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலின்போது தந்த வாக்குறுதியை திமுக அரசு காற்றில் பறக்க விட்டுள்ளதாக கூறி அதிருப்தியில் உள்ளனர். பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது தொடர்பாக அரசு கமிட்டி அமைத்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு பெரிய சிரமம் இருக்காதபோது, எதற்காக அரசு தயங்குகிறது என்றும் ஊழியர்கள் கேட்டு வருகிறார்கள். அதேபோல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்ற வருத்தமும் ஊழியர்களுக்கு உள்ளது.
அதுமட்டுமல்ல, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தாலும், அங்கெல்லாம் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை என்றும் குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.
அங்கன்வாடி ஊழியர்கள்
இப்படிப்பட்ட சூழலில், குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரி மற்றொரு கோரிக்கை அரசுக்கு சென்றுள்ளது.. கடந்த சட்டசபை தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 வருடமாகியும் இதுதொடர்பாக எந்த வித அறிவிப்பும் வரவில்லை.
எனவே, முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்டும் கடிதம் அனுப்பும் போராட்டத்தை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் துவக்கியுள்ளனர்.. இதுகுறித்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலர் பாண்டி செய்தியாளர்களிடம் சொன்னபோது:
குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை
"குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை மாதம் 7,850 ரூபாய், உரிய அகவிலைப்படி 53 சதவீதம் வழங்கக்கோரி கடிதம் எழுதும் போராட்டத்தை துவக்கியுள்ளோம். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், இலவச மருத்துவ காப்பீடு, பண்டிகை முன்பணம், பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்கனவே, ஏப்ரல் 9ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம்.
ஏப்ரல் 16ல் நடக்கும் சத்துணவு துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில், மறியல் போராட்டத்தை ஒத்தி வைத்து, நினைவூட்டும் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications