சென்னையில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம்.. 5 ஏக்கரில் உருவாக போகும் பிரம்மாண்ட பொக்கிஷம்
சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தவும் மற்றும் தனித்தன்மையைப் பறை சாற்றும் கைவினைப் பொருள்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னையில் 5 ஏக்கரில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி துறை அமைச்சருமான சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் மிகப்பெரிய அளவில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய முடிவு செய்தது. இதற்கான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியிருக்கிறது.

இதுஒருபுறம் எனில் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் 2026 அல்லது 2027ம் ஆண்டில் பெரும்பாலான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரத்தின அசுர வளர்ச்சியை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மெட்ரோவில் தான் வருங்காலத்தில் எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போக முடியும் என்கிற நிலை உருவாகும்.
ஏனெனில் தற்போதைய நிலையில் சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கடந்து இரவில் கிளாம்பாக்கம் சென்று பேருந்தைகூட பிடிக்க முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. இதேபோல் விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் வரும் காலத்தில் மெட்ரோவில் சென்றால் மட்டுமே விமானத்தை பிடிக்க முடியும் என்கிற நிலை உருவாகும். இதேபோல் தான் ஒவ்வொரு இடங்களுக்கும் பொதுபோக்குவரத்தான மெட்ரோ மிக அவசிய மற்றும் அத்தியாவசியமான ஒன்றாக மாறப்போகிறது. மற்ற நகரங்களில் மெட்ரோ திட்டம் தோல்வியை தழுவினாலும், சென்னையில் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் அட்சய பாத்திரமாக உருவெடுக்க போகிறது.
சென்னை மெட்ரோ திட்டத்தை போல் பல்வேறு புதிய திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. குறிப்பாக கலாச்சார ரீதியாகவும், நம் மாநில பொருட்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னையை பொறுத்தவரை வாகன உதிரிபாகனங்கள் விற்பனைக்கு என்றே ஒரு ஏரியா, செல்போன் மற்றும் கணிணி விற்பனைக்கு என்றே ஒரு ஏரியா , உணவு சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான உணவு தெருக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல் மீன் விற்பனைக்கும் உலகத்தரத்தில் சந்தைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் 5 ஏக்கரில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி துறை அமைச்சருமான சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இதுபற்றி சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்," தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தவும் மற்றும் தனித்தன்மையைப் பறைசாற்றும் கைவினைப் பொருள்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு வசதிகளுடன் கூடிய கடைகள், அரங்கங்கள் மற்றும் பொது வசதிகளுடன் கைவண்ணம் சதுக்கம் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.40 கோடியில் அமைக்கப்படும்" என்றார்.
இந்த கடைகள் எந்த பகுதியில் அமைக்கப்படும் என்பது குறித்து அரசு அறிவிக்கவில்லை.. இந்த கடைகள் மற்றும் அரங்குகள் பிரம்மாண்ட வசதிகளுடன் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டால் கைவினைப் பொருள்களின் விற்பனை செய்யும் ஏராளமான கலைஞர்கள் பயன்பெறுவார்கள். நமது மாநிலத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர் மறறும் வெளிமாநிலத்தவர்கள் இந்த கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் நமது மாநிலத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு வைத்த கைவினைப்பொருட்கள் தயாரிப்பு உள்ளது. அவற்றை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கவும், அதை வாங்கவும் வாய்ப்பாக அமையும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது, ஏராளமான கைவினை கலைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications