இந்திய பெருங்கடலில் பெரிய புராஜெக்ட்.. முக்கியத்துவம் பெறும் தமிழ்நாடு.. மாஸ் காட்டும் மத்திய அரசு!
சென்னை: தமிழ்நாட்டுக்கு நெருக்கமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் ஆய்வகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ஆழ்கடல் உயிர்கள் குறித்த ஆய்வுகள் புதிய இலக்குகளை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் கடல் குறித்த ஆய்வுகளுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றன. காரணம் கடலில் இருந்துதான் உயிர்கள் பூமிக்கு வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, இப்போது இருக்கும் உயிர்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் எனில் முதலில் கடலைத்தான் ஆய்வு செய்ய வேண்டும். அங்குள்ள தாவரங்கள், விலங்குகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த இதுவரை தெரியாத விஷயங்களை கண்டுபிடிக்க முடியும்.

இந்த கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் அங்கிகாரத்தை பெற்றுக்கொடுக்கும். எனவே இந்தியா இந்த ஆய்வில் இறங்கப்போவதாக தெரிவித்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் ஆய்வு மையம் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கடல்பரப்பில் வெவ்வேறு ஆழங்களில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நீண்ட காலப் பார்வையின் ஒரு பகுதியான இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வரை இந்த திட்டம் கருத்தியல் ரீதியாகதான் இருக்கிறது. இந்த ஐடியாவின் மீது முதலீடு செய்பவர்களை அரசு தேடி வருகிறது. முதலீடு கிடைக்கப்பெற்றவுடன் முழு வேகத்தில் பணிகள் தொடங்கப்படும். ஆய்வகத்தின் நோக்கம் கடல் உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான இந்தியாவை ஒரு நாடுகடந்த மற்றும் பிராந்திய மையமாக மாற்றுவதுதான்.
மட்டுமல்லாது உயிரியல் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த புதிய உயிர் மூலக்கூறுகள் கடலுக்கு அடியில் இருப்பதாக அரசாங்கம் நம்புகிறது. தவிர ஆழ்கடல் உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வு, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியில் புதிய வாய்ப்பு வாசல்களை இந்த ஆய்வு திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, மற்ற நாடுகளிடம் இல்லாத முக்கிய அம்சம் இருக்கிறது. அதாவது, நமது நாட்டை சுற்றி வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் என மூன்று கடல்கள் இருக்கின்றன. இது மூன்றிலும் வித்தியாசமான உயிர்கள், தாவரங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது நமது நாட்டுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷமாக இருக்கிறது. தற்போது திட்டமிட்டுள்ளபடி ஆய்வுகள் சிறப்பாக நடைபெறுமாயின், அடுத்தடுத்த காலகட்டத்தில் ஆழ்கடல் ஆய்வில் இந்தியா தவிர்க்க முடியாத நாடாக உருவெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications