நான் முதல்வன் திட்டத்தில் அடுத்த லெவல் அறிவிப்பு.. பிளஸ் 2 முடித்தவர்களுக்காக தமிழக அரசு உத்தரவு
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களை படிக்க வைக்க 'உயர்வுக்கு படி' முகாம் என்ற முகாமை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனுப்பியுள்ள கடிதத்தில், 2023 மற்றும் 2024-ம் கல்வியாண்டில் படித்து உயர் கல்வியில் சேராமல் இருக்கும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 129 மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நான் முதல்வன் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்படி ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற பயிற்சி பெற முடியும். இதேபோல் வேலைவாய்ப்பு பயிற்சி பெற முடியும். இதேபோல் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் நல்ல நிறுவனங்களில் வேலைக்கும் சேர முடியும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 12ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு சேராதவர்களை கணக்கெடுக்கும் அரசு, அவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

படிக்காத மாணவர்களின் லிஸ்டை மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கும் அரசு, அவர்கள் ஏன் படிக்கவில்லை.. படிக்க முடியாததற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து உயர்கல்வி பயில உதவி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்படுத்து வருகிறது. ஏனெனில் வறுமையின் காரணமாக யாரும் உயர்கல்வி படிக்காமல் விடக்கூடாது என்பதற்காகவே, மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தை மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களை படிக்க வைக்க 'உயர்வுக்கு படி' முகாமை நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எழுதிய கடிதத்தில், "12-ம் வகுப்பு தேர்வுக்கு செல்லாமல் தோல்வியுற்ற அல்லது தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டத்தில் உயர்வுக்கு படி-2024 என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. 2022-23-ம் கல்வியாண்டில் மொத்தமுள்ள 3.98 லட்சம் 12-ம் வகுப்பு மாணவர்களில் 1.13 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவோ அல்லது சரியான தகவல்களை அளிக்கவோ இல்லை. 2023-24-ம் கல்வியாண்டில் மொத்தமுள்ள 3.32 லட்சம் 12-ம் வகுப்பு மாணவர்களில் 1.34 லட்சம் மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கவோ அல்லது சரியான தகவல்களை அளிக்கவோ இல்லை.
2023 மற்றும் 2024-ம் கல்வியாண்டில் படித்து உயர் கல்வியில் சேராமல் இருக்கும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 129 மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 94 வட்டாரங்களில் நான் முதல்வன் உயர்வுக்குப்படி என்ற திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். உயர் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை மாவட்ட கலெக்டர் ஒருங்கிணைக்க வேண்டும்.
எங்கு? எப்போது?: செங்கல்பட்டு, சென்னை மத்தி, காஞ்சிபுரம் ஆகிய வட்டாரங்களில் வருகிற 9-ந்தேதி முதல் கட்ட முகாம், 19-ந்தேதி 2-ம் கட்ட முகாம், 28-ந்தேதி 3-ம் கட்ட முகாம் நடத்தப்படும். மதுராந்தகம், சென்னை வடக்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டாரங்களில் 12-ந்தேதி முதல் கட்ட முகாம், 23-ந்தேதி 2-ம் கட்ட முகாம், அக்டோபர் 3-ந்தேதி 3-ம் கட்ட முகாம் நடத்தப்படும்.
தாம்பரம், சென்னை தெற்கு ஆகிய வட்டாரங்களில் 17-ந்தேதி முதல் கட்ட முகாம், 26-ந்தேதி 2-ம் கட்ட முகாம், அக்டோபர் 7-ந்தேதி 3-ம் கட்ட முகாம் நடத்தப்படும். திருவள்ளூரில் 11-ந் தேதி முதல் கட்ட முகாம், 21-ந்தேதி 2-ம் கட்ட முகாம், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட முகாம் நடத்தப்படும். பொன்னேரியில் 14-ந்தேதி முதல் கட்ட முகாம், 25-ந்தேதி 2-ம் கட்ட முகாம், அக்டோபர் 5-ந்தேதி 3-ம் கட்ட முகாம் நடத்தப்படும். திருத்தணியில் 18-ந்தேதி முதல் கட்ட முகாம், 27-ந்தேதி 2-ம் கட்ட முகாம், அக்டோபர் 8-ந்தேதி 3-ம் கட்ட முகாம் நடத்தப்படும். முகாமை காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைப்பார்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications