மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை.. உதவித் தொகை எப்போது கிடைக்கும்! அரசு கொடுத்த முக்கிய வாக்குறுதி..!
சென்னை: முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசின் பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் உறுதி அளித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் தொடர்பாக இன்று (16.07.2024) தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலர் தலைமையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க (TARATDAC) உறுப்பினர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர். கூடுதல் இயக்குநர். (MGNREGP). ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை. துணை ஆணையர்(திட்டங்கள்). வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. உதவி ஆணையர் II, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் TARATDAC சங்கத்தின் தலைவர் வில்சன் மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இப்பேச்சுவார்த்தையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்படியாக உதவித் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரசுச் செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலைக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்ட விதிகளின் படி உடனே வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பாக 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்சமயம் குறைந்த பணிகளே வழங்கப்பட்டு வருகிறது எனவும், இனி வரும் காலங்களில் அதிகப்படியான பணிகள் வழங்கப்பட உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூடுதல் இயக்குநரால் (ஊரக வளர்ச்சித் துறை) தெரிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப ரேசன் கார்டுகளை AAY அட்டையாக மாற்றி விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் ரேசன் கார்டு எண் பட்டியலை மாவட்ட வாரியாக வழங்கும் பட்சத்தில் அதனடிப்படையில் அனைவருக்கும் AAY அட்டைகளாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறாக மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அரசால் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அரசுச் செயலாளர் (மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ) அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினரால் (TARATDAC) கோரப்படும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பேச்சுவார்த்தையின் போது அந்தந்த துறையினர் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு 16.07.2024 அன்று நடைப்பெறும் முற்றுகை போராட்டத்தினை கைவிடுமாறு மாற்றுத்திறனாளிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications